துபாய் : நாளை முதல் விசிட் மற்றும் சுற்றுலா விசாவில் அமீரகம் வரலாம்..!! பாஸ்போர்ட்களில் சிறப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும் என தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் நாளை முதல் சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் வெளிநாட்டவர்கள் துபாய் வரலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, துபாய் விமான நிலையமானது தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சுற்றுலாவாசிகளை வரவேற்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை முதல் துபாய் வரவிருக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் பாஸ்போர்ட்களில் ஒட்டப்படும் சிறப்பு ஸ்டிக்கர் ஒன்றை ரெசிடென்ஸ் மற்றும் வெளியுறவு விவகாரங்களுக்கான பொது இயக்குனரகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த ஸ்டிக்கரானது ‘உங்களின் இரண்டாவது வீட்டிற்கு அன்பான வரவேற்பு (A warm welcome to your second home)’ என்ற செய்தியைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையிலும் குடியிருப்பாளர்கள் (residents) மட்டுமே அமீரகம் திரும்ப அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் துபாய் வர விரும்புவர்களுக்கான அறிவிப்பை மாண்புமிகு ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் வழிகாட்டுதலில் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் தலைமையிலான துபாய் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்ச குழு வெளியிட்டிருந்தது.
அந்த அறிவிப்பின் படி ஜூலை 7 ஆம் தேதி முதல் சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் வெளிநாட்டவர்கள் துபாய் வர அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு, சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் வருபவர்களுக்கு சில நிபந்தனைகளையும் உச்ச குழு வெளியிட்டிருந்தது.
அதன் படி, துபாய் வரும் வெளிநாட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பதற்கான சோதனை முடிவு (Covid-19 Negative Test Result) வைத்திருக்க வேண்டும் என்றும், அந்த சோதனை எடுக்கப்பட்டு 96 மணி நேரங்களுக்குள் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சோதனை முடிவு இல்லாத பட்சத்தில் துபாய் விமான நிலையத்தில் கொரோனாவிற்கான பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனையில் நேர்மறையான முடிவை (Positive Result) பெறும் வெளிநாட்டவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.