வந்தே பாரத் திட்டத்தில் வஞ்சிக்கப்படும் வளைகுடா வாழ் தமிழர்கள்..!! வலுக்கும் கண்டனம்..!! கண்டுகொள்ளாத தமிழக அரசு..!!
உலக நாடுகளிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலாக அறியப்பட்ட COVID-19 எனப்படும் கொரோனா தொற்றுநோய் உலக அளவில் பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து, உலகின் பல்வேறு நாடுகளும் பிற நாடுகளுக்கு இடையேயான பயணிகள் விமான போக்குவரத்தை முற்றிலும் தடை செய்தது. கொரோனாவின் பாதிப்புகள் இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கியதை அடுத்து, கடந்த மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அன்று முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை மற்றும் இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையேயான சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
விமான போக்குவரத்து தடையின் காரணமாக வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய இந்தியர்கள் விடுமுறைக்காகவோ அல்லது இன்ன பிற தேவைகளுக்காகவோ தாயகம் திரும்ப முடியாமலும், இந்தியாவிற்கு ஏற்கனவே விடுமுறைக்காக வந்தவர்களில் தாங்கள் பணிபுரியும் அல்லது வசிக்கும் நாடுகளுக்கு திரும்பி செல்ல முடியாமலும் பலரும் தவித்து வந்தனர்.
வந்தே பாரத் திட்டம் :
இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் குடும்பத்தினர், அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்திய அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுத்ததை தொடர்ந்து,வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை இந்தியாவிற்கு அழைத்து வர “வந்தே பாரத்” எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டம் பல கட்டங்களாக மேற்கொள்ளப்படும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மே மாதம் 4 ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதன் படி, வந்தே பாரத் திட்டத்தின் முதல் கட்டம் மே மாதம் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
மே 7 ம் தேதி தொடங்கப்பட்ட இந்த வந்தே பாரத் திட்டம், முதல் கட்டம், இரண்டாவது கட்டம், இரண்டு+, இரண்டு++, மூன்றாவது கட்டம் என பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு தற்போது நான்காவது கட்டமாக இந்தியர்களை வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு அழைத்து செல்லும் பணி தற்பொழுது வரையிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வஞ்சிக்கப்படும் வளைகுடா வாழ் தமிழர்கள் :
உலகின் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வளைகுடா நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் இந்தியா திரும்பியுள்ளனர். ஆனால் வளைகுடா நாடுகளிலிருந்து தமிழகம் திரும்பிய தமிழர்களின் எண்ணிக்கையோ வெறும் சொற்ப எண்ணிக்கையில்தான் உள்ளது. வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் கேரளா மாநிலத்தவர்களுக்கு அடுத்தபடியாக தமிழ் நாட்டை சேர்ந்தவர்களே அதிகமான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
இருப்பினும் வளைகுடா நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இயக்கப்பட்ட சிறப்பு விமானங்களின் எண்ணிக்கையோ மிக மிக குறைவு. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தின் காரணமாக பல்வேறு தமிழர்கள் தங்களின் வேலையை இழந்து, உணவிற்கும் இருப்பிடத்திற்கும் பிறரின் உதவியை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இருக்கக்கூடிய பல தமிழர்களும் சிறப்பு விமானத்தில் பயணிக்க இந்திய தூதரகத்திடம் இருந்து அழைப்பு வராதா என ஏங்கியே தங்களின் ஒவ்வொரு நாளையும் கடந்து வருகின்றனர்.
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தினால் விசா கேன்சல் செய்யப்பட்டு விமான பயண அனுமதிக்காக காத்திருக்கும் ஒருவர் கூறும்போது, “எங்களின் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களில் என்னுடன் விசா கேன்சல் செய்யப்பட்ட கேரளத்தவர்கள் அனைவரும் இலவச விமான டிக்கெட்டில் அவர்களின் மாநிலத்திற்கு சென்று விட்டதாகவும், தான் மட்டும் இன்று வரை நாடு செல்ல வழி இல்லாமல் தவித்து வருவதாகவும்” கூறினார்.
இன்னொருவர் கூறும்போது, “தன் சொந்த செலவில் விமான டிக்கெட் எடுத்து இந்தியா பயணிக்க தயாராக இருந்தும் விமான பயணத்திற்கு அனுமதி கிடைக்காத நிலையில், என்னுடன் பணிபுரிந்த பாகிஸ்தானியர்களும் பிலிப்பைன் நாட்டவர்களும் இலவசமாக அவர்களின் நாட்டிற்கு அழைத்து செல்ல பட்டதை பார்க்கும்போது எனக்கு பொறாமையாக இருந்தது” என்று தெரிவித்தார்.
வளைகுடா நாடுகளில் இருக்கக்கூடிய தமிழர்களின் நிலையை அரசின் கவனத்திற்கு பலமுறை தெரியப்படுத்தியும் அதனை கண்டும் காணாததுபோல் தமிழக அரசு இருந்து வருவது அனைவரையும் வருத்தமடைய செய்துள்ளது. தமிழகத்தை விட குறைவான மக்கள்தொகை கொண்ட அண்டை மாநிலமான கேரளாவோ, தங்கள் மாநில மக்களை நாட்டிற்கு அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இதுவரையிலும் பல்லாயிரக்கணக்கானோரை வெளிநாடுகளிலிருந்து அழைத்து வந்துள்ளது. ஆனால் தமிழக அரசோ தமிழர்களை மீட்டு வருவதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாமலும், அவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமலும் இன்றளவும் மௌனமாகவே இருந்து வருவது தமிழர்கள் அனைவரையும் வேதனை அடைய செய்துள்ளது.
வந்தே பாரத் திட்டத்தில் இனியும் போதுமான அளவில் தமிழகத்திற்கு விமானங்கள் இயக்கப்படும் என்ற நம்பிக்கையை இழந்துள்ள நிலையில், சர்வதேச விமான சேவைகளையாவது விரைவில் தொடங்க வேண்டும் என இந்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றனர். வளைகுடா வாழ் தமிழர்களை தமிழக அரசு கைவிட்டுவிட்ட நிலையில், தன்னார்வலர்கள் மூலமாக இயக்கப்படும் தனி விமானங்கள் மூலமாவது தாயகம் சென்றுவிட அனுமதி கிடைக்குமா என பலரும் தங்களின் வாய்ப்பிற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்தவர்களில் விசா கேன்சல் செய்யப்பட்டு தற்போது வரையிலும் இங்கேயே தங்கி இருப்பவர்களின் நிலைமையோ இன்னும் மோசமாக உள்ளது. அமீரக சட்டப்படி விசா கேன்சல் செய்யப்பட்ட நபர் ஒரு மாத காலத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும். இல்லையென்றால் சலுகை காலம் முடிந்த நாளிலிருந்து அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தங்களின் விசா கேன்சல் செய்யப்பட்டு இன்று வரையும் இந்தியா திரும்ப முடியாமல் தவிப்பவர்கள் பெரும் கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.
முதல் கட்டம் :
வந்தே பாரத்தின் முதல் கட்டமான மே 7 ஆம் தேதி முதல் மே 13 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு மொத்தம் 29 விமானங்களில் 4 விமானங்கள் மட்டுமே தமிழகத்திற்கு இயக்கப்பட்டிருந்தது. எனினும் முதலாம் கட்டத்தில் சவூதி அரேபியா, கத்தார் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கு ஒரு விமானமும் இயக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் கட்டம் :
அடுத்ததாக தொடங்கப்பட்ட இரண்டாம் கட்ட நடவடிக்கையில் முதற் கட்டமாக இந்தியாவிற்கு 57 விமானங்கள் இயக்கப்பட்டிருந்தது. அதில் தமிழகத்திற்கு ஒரு விமானம் கூட ஒதுக்கப்படாமல் புறக்கணிப்பட்டிருந்தது. பின்னர் வெளியிட்ட 2+ மற்றும் 2++ என்று கூடுதலாக சேர்க்கப்பட்ட விமான சேவைகளின் மூலம் இந்தியாவிற்கு வளைகுடா நாடுகளிலிருந்து 309 விமானங்கள் ஒதுக்கப்பட்டன. இருப்பினும் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையோ வெறும் 21 மட்டுமே.
மூன்றாம் கட்டம் :
மூன்றாம் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட மொத்தம் 112 விமானங்களில் வெறும் 5 விமானங்களே தமிழகத்திற்கு இயக்கப்பட்டன. அதேபோல் மூன்றாம் கட்டத்தில் குவைத் மற்றும் கத்தார் நாட்டிலிருந்து தமிழகத்திற்கு விமானங்கள் ஏதும் இயக்கப்படவில்லை.
நான்காம் கட்டம் :
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நான்காம் கட்ட திட்டத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 315 விமானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்திற்கு செல்லும் விமானங்களின் எண்ணிக்கை வெறும் 29 மட்டுமே.
முதல் கட்டம் தொடங்கப்பட்ட மே 7 முதல் நான்காம் கட்ட அறிவிப்பு வரையிலும் மொத்தமாக 765 விமானங்கள் வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்டிருந்தும், வெறும் 59 விமானங்களே தமிழக மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருப்பது வேதனையின் உச்சம்.
மேலும் வளைகுடா நாடுகளில் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் அனைத்து கட்ட நடவடிக்கைகளிலும் இந்தியா முழுவதிலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கேரள மாநிலத்திற்கே அதிகளவிலான விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன என்பதே நிதர்சனமான உண்மை.
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இயக்கப்படும் விமானங்களில் தமிழகத்திற்கு மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே விமானங்கள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது அமீரகத்திற்கு சொந்தமான விமான நிறுவனங்களின் மூலமாக இந்தியாவிற்கு இயக்கப்பட்டு வந்த தனி விமான சேவைக்கும் தற்பொழுது இந்திய சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குனரகம் அனுமதி மறுத்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த வாரம் மதுரை செல்லவிருந்த இரு விமானங்கள் உட்பட அமீரகத்தின் எதிஹாட், ஏர் அரேபியா, பிளை துபாய் போன்ற விமானங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சார்ட்டர் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு பயணிகள் அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தையும் தமிழக அரசு கவனத்தில் கொண்டு நாடு திரும்ப விரும்பும் தமிழர்களை உடனடியாக இந்தியா அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளை உடனே தொடங்க வேண்டும் என்பதே வளைகுடா வாழ் தமிழர்கள் அனைவரின் வேண்டுகோளாக இருக்கின்றது.