கொரோனாவை தொடர்ந்து விதிக்கப்பட்ட அமீரக விசா தொடர்பான விதிகளில் திருத்தம் செய்துள்ள அமீரக அரசு..!! ஆவணங்களை புதுப்பிக்க 3 மாதமே சலுகை காலம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்றுநோய் பரவ தொடங்கியதையடுத்து வெளிநாட்டவர்களின் விசாக்கள், நுழைவு அனுமதி, குடியிருப்பு மற்றும் எமிரேட்ஸ் ஐடி உள்ளிட்டவை தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாள மற்றும் தேசியத் துறையினால் வெளியிடப்பட்டிருந்த முடிவுகளில் அமீரக அமைச்சரவை தற்பொழுது பல திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. கொரோனாவின் பாதிப்புகள் குறைந்ததன் காரணமாக பல்வேறு துறைகளில் இயல்புநிலை திரும்பியுள்ளதை தொடர்ந்தும், வணிக தொடர்ச்சியை ஆதரிக்கும் வகையிலும் இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்புகளின் படி, அமீரக ரெசிடென்ஸ் விசா, நுழைவு அனுமதி மற்றும் எமிரேட்ஸ் ஐடி தொடர்பாக செயல்படுத்தப்படும் அனைத்து முடிவுகளையும் ஜூலை 11, 2020 ம் தேதியுடன் நிறுத்துவதற்கும், ஜூலை 12, 2020 முதல் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடிய சேவைகளுக்கு கட்டணங்களை வசூலிக்கத் தொடங்குவதற்கும் ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொடர்ச்சியாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெளிநாடுகளில் இருக்கும் அமீரக குடியிருப்பாளர்களில் மார்ச் 1, 2020 க்குப் பிறகு காலாவதியான விசாக்களை கொண்டிருப்பவர்கள் மற்றும் அமீரகத்தை விட்டு வெளியே 6 மாதங்களுக்கு மேல் தங்கியிருக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் அனைவரும் இரு நாடுகளுக்கும் இடையேயான விமானப் போக்குவரத்து துவங்கப்படும் பட்சத்தில் அமீரகம் திரும்புவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்குள்ளே இருக்கக்கூடிய ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள், அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் GCC குடிமக்கள் காலாவதியான தங்களின் ஆவணங்களை புதுப்பிக்க 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும், அதே போன்று அமீரகத்திற்கு வெளியே 6 மாதங்களுக்கும் குறைவாக தங்கியிருந்த அமீரக குடிமக்கள், GCC நாட்டவர்கள் மற்றும் அமீரக குடியிருப்பாளர்கள், அமீரகத்திற்கு திரும்பி வந்த நாளிலிருந்து தங்களது காலாவதியான ஆவணங்களை புதுப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆவணங்களை புதுப்பித்துக்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ள காலங்களில் அபராதம் வசூலிக்கப்படாது என்றும் சலுகை காலம் முடிந்த பின்னரும் தங்களது ஆவணங்களை புதுப்பிக்காமல் இருப்போருக்கு அபராதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது அமீரக அமைச்சரவையால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ஆவணங்களை புதுப்பிப்பதற்காக குறிப்பிடப்பட்டுள்ள சலுகை காலமானது ஜூலை 12 க்கு பின்னர் காலாவதியாகக்கூடிய விசாக்களுக்கு மட்டும் பொருந்துமா, இல்லை மார்ச் 1 க்கு பின்னர் காலாவதியாகியிருக்கும் அனைத்து விசாக்களுக்கும் பொருந்துமா என்று சரியாக தெளிவுபடுத்தப்படவில்லை. அமீரக அரசின் முந்தைய அறிவிப்பின்படி, மார்ச் 1 க்கு பின்னர் காலாவதியான அனைத்து குடியிருப்பாளர்களின் விசாக்களும் இந்த ஆண்டு இறுதி வரையிலும் நீட்டிக்கப்பட்டு ICA வலைத்தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
இதே போன்று வெளிநாடுகளில் இருந்து அமீரகத்திற்கு விசிட் விசா, சுற்றுலா விசா போன்ற விசாக்களில் அமீரகத்திற்கு வந்து தங்களது நாட்டிற்கு திரும்ப முடியாமல் இருப்பவர்களை குறித்து தெளிவான விளக்கம் ஏதும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. குடியிருப்பாளர்களை போன்றே சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் அமீரகத்திற்கு வந்து மார்ச் 1 ம் தேதிக்கு பின்னர் காலாவதியான அனைத்து விசிட் மற்றும் சுற்றுலா விசாக்களும் இந்த ஆண்டு இறுதி வரையிலும் விசா காலம் நீட்டிக்கப்படும் என அமீரக அரசால் அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.