அமீரக செய்திகள்

UAE : சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்புபவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாட்ஸ்அப் (Whatsapp) மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் தவறான தகவல்களையும் வதந்திகளையும் அனுப்பும் நபர்கள் குறைந்தது ஒரு வருடமாவது சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்று துபாயின் பொது வழக்குகள் துறை எச்சரித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததில் இருந்து சமூக ஊடக தளங்களில் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்ட பல செய்திகள், சமூகத்தின் நிலைத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தி எதிர்மறையான உணர்வை உருவாக்கக்கூடிய தவறான தகவல்களைக் கொண்டுள்ளன என்று மூத்த வழக்கறிஞர் டாக்டர் காலித் அல் ஜுனைபி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “பலர் தங்களுக்கு கிடைத்த செய்திகளை அதிகாரப்பூர்வ பக்கங்கள் மூலம் சரிபார்க்காமல் அனுப்புகிறார்கள். செய்தி தவறான தகவல்களாக இருக்கும் சூழ்நிலைகள் இருப்பதால் இவ்வாறான செயல்களில் ஈடுபடும் போது எச்சரிக்கையாக இருங்கள். உங்களுக்கு நல்ல எண்ணம் இருந்தாலும் அதைப் பரப்புவதற்கான ஒரு கருவியாக நீங்கள் மாறிவிடுவீர்கள்” என்று வதந்திகளைப் பரப்புவதன் ஆபத்துகள் குறித்து வழக்கறிஞர் அல் ஜுனைபி அவர்கள் கூறியிருக்கிறார்.

“மக்கள் மற்றவர்களுக்கு அனுப்பும் செய்திகளுக்கு அவர்களே பொறுப்பு. அவர்கள் தவறான தகவல்களைப் பரப்ப விரும்பவில்லை என்று கூறி மறைக்க முடியாது. தவறான செய்திகளை பரப்பும் அவர்களே தங்களுக்கும் சமுதாயத்திற்கும் பொறுப்பாவார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில் ஐக்கிய அரபு அமீரக ஃபெடரல் சட்டத்தின் பிரிவு 198 ன் படி வதந்திகளை பரப்பினால் அந்த செய்தியை பரப்புபவர்கள் மீது குறைந்தது ஒரு வருடம் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “சிலர் தங்கள் வாட்ஸ்அப்பில் பெறப்பட்ட முழு செய்தியையும் கூட படிக்க மாட்டார்கள், அது ஒரு வதந்தி மட்டுமே என்பதை உணராமலேயே மற்றவர்களுக்கு விரைவாக அனுப்புகிறார்கள். மக்கள் அனுப்பும் செய்தியை அனுப்புவதற்கு முன்பு அதை கவனமாக சரிபார்க்க வேண்டும்”.

“உதாரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் திறக்கப்பட்டிருந்த ஷாப்பிங் மால்கள் மீண்டும் மூடப்படுவதாக பரவிய வதந்தி ஒன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறுக்கும் வரை அந்த செய்தி பரவி பல பேருக்கு குழப்பங்களை ஏற்படுத்தியது. அந்த செய்தியை மக்கள் பரப்பிக்கொண்டே இருந்ததால் பல பேருக்கு அந்த செய்தி பரவி பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. செய்திகளை அனுப்புவதற்கு முன்பு மக்கள் தெளிவாக சரிபார்த்து அனுப்பினால் மட்டுமே இந்த குழப்பங்களை தவிர்க்கலாம். இதுபோன்ற செய்திகளைத் தடுப்பதன் மூலம் வதந்திகளை எதிர்த்துப் போராடும் பொறுப்பு சமூகத்திற்கு உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Public Prosecution – Dubai (@dxbpp) on


கொரோனா வைரஸ் பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பின்தொடருமாறும் வழக்கறிஞர் அல் ஜுனைபி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!