UAE : மார்ச் 1 க்குப் பிறகு காலாவதியான விசிட் விசாவைக் கொண்டிருப்பவரா நீங்கள்.?? உங்களுக்கான சில தகவல்கள்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் மார்ச் 1 ம் தேதிக்குப் பிறகு காலாவதியான எமிரேட்ஸ் ஐடி மற்றும் ரெசிடென்ஸ் விசாக்கள் இந்த ஆண்டு வரை நீட்டிக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்ததை கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதே போன்று, மார்ச் 1 ஆம் தேதிக்கு பிறகு காலாவதியான விசிட் மற்றும் சுற்றுலா விசாவினை கொண்டு தற்போது அமீரகத்தில் தங்கி இருப்பவர்களின் விசா நீட்டிப்பும் ரத்து செய்யப்படுவதாகவும், காலாவதியாகி இருக்கும் விசாக்களைக் கொண்டிருக்கும் நபர்கள் அடுத்த ஒரு மாத காலத்திற்குள் புதிய விசாவை பெற வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் (ICA) செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் காமிஸ் அல் காபி சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, காலாவதியான விசிட் மற்றும் சுற்றுலா விசாக்களைக் கொண்டிருக்கும் நபர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கான விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கேள்வி : அபராதம் விதிக்காமல் நாட்டிலிருந்து வெளியேற கடைசி தேதி எப்போது?
விசிட் விசா வைத்திருப்பவர்கள் நாட்டிலிருந்து வெளியேற ICA, ஜூலை 12 முதல் ஒரு மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது.
கேள்வி : நான் ஆன்லைனில் புதிய விசிட் விசா பெறலாமா?
இல்லை. நீங்கள் ஒரு பயண முகவர் (ஏஜென்ட்) மூலம் புதிய விசாவைப் பெற வேண்டும் அல்லது டைப்பிங் சென்டர் மூலமாகவும் புதிய விசாவை பெறலாம்.
கேள்வி : புதிய விசிட் விசாவின் செல்லுபடியாகும் காலம் என்ன?
நாட்டிற்குள் இருக்கும் நபர்கள் ஒன்று அல்லது மூன்று மாதங்கள் செல்லுபடியாகும் விசிட் விசாக்களைப் பெறலாம்.
கேள்வி : புதிய விசிட் விசாவைப் பெற எவ்வளவு செலவாகும்?
ஒரு மாத செல்லுபடியாகும் விசாவினை பெறுவதற்கு 1,700 திர்ஹம் மற்றும் மூன்று மாத செல்லுபடியாகும் விசாவினை பெறுவதற்கு 2,200 திர்ஹம் செலவாகும். (மேலே குறிப்பிட்டுள்ள தொகைகளில் நாட்டை விட்டு வெளியேறாமல் புதிய விசா பெற செலவாகும் 670 திர்ஹம் கட்டணமும் அடங்கும்).
கேள்வி : ரத்து செய்யப்பட்ட ரெசிடென்ஸ் விசாவில் இருந்தால், விசிட் விசாவிற்கு விண்ணப்பிக்கலாமா?
ரத்து செய்யப்பட்ட ரெசிடென்ஸ் விசாவில் இருந்தால், விசிட் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
கேள்வி : சுற்றுலா விசாவை ஒரு ரெசிடென்ஸ் விசாவாக மாற்ற முடியுமா?
வேலை கிடைத்தால் நிறுவனத்தின் மூலம் சுற்றுலா விசாவை ரெசிடென்ஸ் விசாவாக மாற்றிக்கொள்ளலாம்.
கேள்வி : ஓவர்ஸ்டேயில் இருப்பவர்களுக்கு அபராதம் எவ்வளவு?
ஐக்கிய அரபு அமீரக குடியேற்ற விதிகளின்படி (immigration), ஓவர்ஸ்டேயில் இருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு 100 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.