அமீரக செய்திகள்

UAE : மார்ச் 1 ம் தேதிக்கு முன்னர் காலாவதியான விசா வைத்திருப்பவர்கள் பொது மன்னிப்பு பெறுவது எப்படி?? தூதரகம் அறிவித்துள்ள வழிமுறைகள்..!!

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வரும் பொதுமன்னிப்பின் மூலம் ஓவர்ஸ்டே அபராதத்திற்கான தள்ளுபடி திட்டத்தைப் பெற விரும்பும் இந்திய மக்கள் தங்கள் விண்ணப்பங்களை இந்திய தூதரக அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

மார்ச் 1 ம் தேதிக்கு முன்னர் காலாவதியாகி இருக்கும் விசாக்களை வைத்திருக்கும் இந்திய நாட்டவர்கள் எந்த அபராதமும் இல்லாமல் ஆகஸ்ட் 17 ம் தேதிக்குள் அமீரகத்தை விட்டு வெளியேறக்கூடிய இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு தனது நாட்டு குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பயணிக்க விரும்புவோர் அவர்கள் பயணிக்கும் தேதிக்கு குறைந்தது ஏழு வேலை நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது. துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்த திட்டம் விசிட் விசா மற்றும் குடியிருப்பு விசா என அனைத்து விசாக்களுக்கும் பொருந்தும் என்று அறிவித்துள்ளார்.

தூதரகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வெளிநாட்டவர்களில் மார்ச் 1 ம் தேதிக்கு முன்னர் காலாவதியாகி இருக்கும் விசாக்களை வைத்திருப்பவர்கள் அல்லது சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருக்கும் நபர்களுக்கு அபராத தள்ளுபடி திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது” என்று கூறியுள்ளது.

மேலும் தெரிவிக்கையில், “இந்திய குடிமக்களில் இதுபோன்ற விசாக்களை வைத்திருந்து அமீரகத்தில் தங்கியிருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும் மற்றும் இந்திய தூதரகத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அபுதாபி விசா வைத்திருப்பவர்கள் அல்லது அபுதாபியில் வசிப்பவர்கள் அபுதாபியில் இருக்கக்கூடிய இந்திய தூதரகத்தை அணுக வேண்டும். துபாய், ஷார்ஜாஹ், அஜ்மான், புஜைரா, ராஸ் அல் கைமா, உம் அல் குவைன் ஆகிய இடங்களின் விசாவினை பெற்றவர்கள் அல்லது வசிப்பவர்கள் துபாயில் உள்ள இந்திய துணை தூதரகத்தை அணுக வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளது.

இது போன்ற விசாக்களை வைத்திருக்கும் நபர்கள் அபராத தள்ளுபடிக்கான விண்ணப்பங்களை விரைவாக செயலாக்குவதற்காக அபுதாபியில் உள்ள தூதரகம் அல்லது துபாயில் உள்ள தூதரகத்துடன் அவர்கள் தொடர்பு கொள்ளுமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொது மன்னிப்புக்கு விண்ணப்பிக்கும் முறைகள்

மின்னஞ்சல் வழியாக விண்ணப்பித்தல்

 • சம்பந்தப்பட்ட நபர்கள் தூதரகம் மற்றும் தூதரகம் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை போல் ஒரு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
 • அந்த விண்ணப்பத்தில் அவர்களின் பாஸ்போர்ட், உள்ளூர் தொடர்பு விவரங்கள்: மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, விசா நகல் போன்ற விபரங்களுடன் தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] (அபுதாபியில் இருப்பவர்கள்) மற்றும் [email protected] ( அபுதாபியை தவிர்த்து மற்ற பகுதிகளில் இருப்பவர்கள்).என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
 • இது இந்தியாவுக்கு பயணிக்க விரும்பும் தேதிக்கு குறைந்தது ஏழு வேலை நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பத்தை பயனாளர்கள் அனுப்ப வேண்டும்.

நேரில் விண்ணப்பித்தல்

 • மக்கள் மின்னஞ்சல் மூலம் ஆவணங்களை ஸ்கேன் செய்யவோ அனுப்பவோ முடியாவிட்டால், தூதரகம் அறிவித்துள்ளதன்படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனை தூதரகத்திற்கு வெளியில் இருக்கும் பெட்டிகளில் இட வேண்டும்
 • இதற்கு பாஸ்போர்ட்டின் நகல் (முதல், கடைசி மற்றும் விசா பக்கம்) மற்றும் தொலைபேசி எண் போன்றவை தேவை.
 • விசிட் விசாவாக இருந்தால், விசாவின் நகலும் இணைக்கப்பட வேண்டும்.

பயண ஆவணம் கட்டாயம்

 • விசா அபராதம் தள்ளுபடி செய்வதற்கான இந்த வாய்ப்பைப் பெற விரும்பும் எந்தவொரு இந்திய நாட்டவரும் பாஸ்போர்ட் போன்ற இந்தியாவுக்குச் செல்ல சரியான பயண ஆவணத்தை வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
 • அவர்கள் பாஸ்போர்ட் வைத்திருக்கவில்லை என்றால், அவர்கள் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்தையோ அல்லது துபாயில் உள்ள இந்திய தூதரகத்தையோ பாஸ்போர்ட் அல்லது அவசர பயண சான்றிதழ் (emergency travel certificate, EC) பெறுவதற்காக அணுகலாம். அவர்கள் அபராத தள்ளுபடிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு முன்னர் இதனை சரி செய்ய வேண்டும்
 • ஒரு வேலை அவசர பயண சான்றிதழ் வழங்கப்பட்டால், அவர்களது பாஸ்போர்ட் தானாகவே கணினியில் ரத்து செய்யப்படும். எனவே, அதைப் பயன்படுத்த முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 • EC பெற்று பயணிக்கும் ஒருவர் இந்தியாவை சென்றடைந்த பின்னர் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்

ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்

 • அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் அல்லது துபாயின் இந்திய துணைத் தூதரகம் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கு விரைவாக அனுப்புவதை உறுதி செய்யும்.
 • விசா அபராதத்திற்கான தள்ளுபடி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டால் பயனாளருக்கு தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
 • ஆவணங்களை செயலாக்க குறைந்தது ஐந்து வேலை நாட்கள் தேவை. அதன் பிறகு விண்ணப்பதாரர் விரைவில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

தூதரகத்திற்கு வெளியே கூட்டங்களை தவிர்த்தல்

இந்த சேவைகளை பெற விரும்புபவர்கள் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்கு வெளியே மக்கள் கூட்டமாக நிற்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!