அபுதாபி: வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் திறன் 30 லிருந்து 60 சதவீதமாக உயர்வு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதையடுத்து அபுதாபியில் இருக்கும் அனைத்து வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்களில் 30 சதவீத திறன் அடிப்படையிலேயே தொழிலாளர்கள் பணிபுரிய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து நிறுவனங்களும் தங்களின் தொழிலாளர் திறனை 60 சதவீதமாக உயர்திக்கொள்ளலாம் என அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத் துறை (Abu Dhabi Department of Economic Development – ADDED) புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத் துறையின் துணைச் செயலாளர் ரஷீத் அப்துல் கரீம் அல் பலூஷி தெரிவிக்கையில், பணிபுரியும் தொழிலாளர் திறனை அதிகரிக்கும் இந்த நடவடிக்கை தனியார் துறை சார்ந்த தொழில்களின் உற்பத்தி திறனை படிப்படியாக உயர்த்தவும், வணிகத் துறையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவும் உதவும் என்று தெரிவித்துள்ளார்.
கரீம் அல் பலூஷி மேலும் தெரிவிக்கையில், கொரோனாவிற்கு எதிரான கடுமையான முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு அனைத்து நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். உடல்நலம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க, தொழிலாளர்களின் தினசரி உடல் வெப்பநிலை சோதனைகள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கான தொலைநிலை பணி வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அல் பலூஷி அறிவுறுத்தியுள்ளார்.
அலுவலகங்களில் பணிபுரியும் நேரத்தில் தொழிலாளர்கள் அனைவரும் முகக்கவசம் மற்றும் கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் கூட்டமாக கூடக்கூடிய பகுதிகளை கட்டுப்படுத்துவதோடு, குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் சமூக இடைவெளியை தொழிலாளர்களுக்கிடையே கடைபிடிக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலே கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை கடைபிடிக்காமல் விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், புதிய விதிமுறைகளை நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக வழக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
In line with measures to ensure business continuity while maintaining workplace health and safety, @AbuDhabiDED has issued a circular stipulating that private sector companies in #AbuDhabi may operate at a maximum on-site workforce capacity of 60 per cent. pic.twitter.com/ZUcGrBskv7
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) July 27, 2020