ஓமான் : டிரைவிங் லைசென்ஸை இனி ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம்..!! காவல்துறை அறிவிப்பு..!!
ஓமான் நாட்டில் இருக்கும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்கள் ஓட்டுநர் அடையாள அட்டையை ஜூலை 12 ஞாயிற்றுக்கிழமை முதல் மின்னணு முறையில் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் ஓமான் காவல்துறை (ROP) ஆன்லைனில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்களது காலாவதியான ஓட்டுநர் அடையாள அட்டையை காவல்துறையின் வலைதளம் மற்றும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலம் ஜூலை 12 ஞாயிற்றுக்கிழமை முதல் மின்னணு முறையில் புதுப்பித்துக் கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளது.
புதுப்பித்த ஓட்டுநர் அடையாள அட்டையை பயனாளிகள் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ROP சேவை மையத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஓமானில் இருக்கும் வெளிநாட்டவர்கள் குறிப்பிட்ட சேவைகளை இனி ஆன்லைனிலேயே இணையதளம் வாயிலாகவோ அல்லது ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் சேவை மையத்தில் கூட்டமாக சென்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் எளிதிலேயே தங்களுடைய சேவைகளை பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.