கொரோனாவின் பாதிப்பால் ஏற்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்து தடையின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்த இலங்கையர்களில் 373 இலங்கையர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த 373 நபர்களில் 332 இலங்கையர்கள் வேலை நிமிர்த்தமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்தவர்கள் என்றும் 41 இலங்கையர்கள், வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்விக்காக இங்கிலாந்திற்கு சென்றவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இலங்கையர்களை அழைத்து சென்ற எமிரேட்ஸ் விமானம் இன்று அதிகாலை 2:15 மணிக்கு விமான நிலையத்திற்கு சென்றடைந்ததாகவும், இங்கிலாந்தில் சிக்கி தவித்த இலங்கையர்களை ஏற்றி சென்ற விமானம் அதிகாலை 4:15 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமான நிலையத்திற்கு வந்தடைந்த பயணிகள் அனைவரும் PCR சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இலங்கையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து சில நாட்களாக வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
துபாயில் இருக்கக்கூடிய இலங்கை தூதரகம் தெரிவிக்கையில், கொரோனாவின் தாக்கத்தையடுத்து அமீரகத்தில் இருக்கக்கூடிய இலங்கை சமூகத்தை ஆதரிப்பதற்கான பல்வேறு முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை தூதரகம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை 5,000 க்கும் மேற்பட்ட பாதிப்புக்குள்ளான இலங்கையர்களுக்கு உலர் ரேஷன் பொருட்களை வழங்கியுள்ளதாகவும் தேவையான மருத்துவ உதவிகளை கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இலங்கையர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இலங்கையில் இருக்கும் தனிமைப்படுத்தலுக்கான வசதிகள் கிடைப்பதை பொறுத்து நாடு திரும்பும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தூதரகம் கூறியுள்ளது.
மேலும், திருப்பி அனுப்பும் விமானத்தில் இலங்கைக்கு செல்ல வேண்டி விண்ணப்பித்தவர்கள் மீண்டும் மீண்டும் தூதரக அலுவலகத்திற்கு வரத் தேவையில்லை என்றும் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.