விமான விபத்தில் இருந்து தப்பியதை இப்போதும் நம்ப முடியவில்லை..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருந்து தப்பிய பயணிகள் தெரிவித்த தகவல்கள்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் இருந்து நேற்று கோழிக்கோட்டிற்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கூட்டை அடைந்த பின்னர் ஓடுதளத்தில் இருந்து சறுக்கியதால் ஏற்பட்ட விபத்தில் அந்த விமானத்தை ஓட்டி சென்ற இரு விமானிகள் உட்பட இதுவரையிலும் 18 பேர் உயிரிழந்ததாகவும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த விமானத்தில் பயணித்த பயணிகளில் சிலர் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.
அந்த விமானத்தில் பயணித்த கோழிக்கோட்டில் உள்ள எலதூரில் வசிக்கும் 25 வயதான ஜுனைத் என்பவர் துபாயில் அக்கவுண்ட்ஸ் துறையில் வேலை பார்த்து வந்துள்ளார். கொரோனா தாக்கத்தையொட்டி நீண்ட நாள் விடுப்பு கிடைத்த காரணத்தினால் அவர் தனது சொந்த ஊருக்கு செல்ல விரும்பி பயணித்துள்ளார். அவர் விமானம் தரையிறங்கி விபத்து ஏற்படுவதற்கு முன் பெரும் சத்தம் ஒலித்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது, “நாங்கள் பயணித்த விமானம் விமான நிலையத்தை அடைந்த பிறகு நாங்கள் சாதாரணமாக தரையிறங்கவிருந்தோம். முதலில் விமானம் தரையிறங்க முயன்றது. பின்னர் தரையிறங்க முடியாமல் மீண்டும் மேலே எழுப்பப்பட்டு, இரண்டாவதாக தரையிறங்கும் முயற்சியில் இந்த விபத்து நிகழ்ந்தது. விமானம் தரையிறங்கும் போது மிகவும் வேகமாக சென்றது. என்ன நடக்கிறது என்பதை நாங்கள் உணரும் முன்பே, அது ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் விமானம் இரண்டாக உடைந்தது. விமானத்தின் முன் பகுதி ஒரு சாய்வாக மூழ்கி இரண்டாகப் பிரிந்தது. மேலும் நடுப்பகுதியில் மற்றொரு வளைவு ஏற்பட்டது. ஆனால் அது பின்புற பகுதியிலிருந்து முழுவதுமாக துண்டிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “விமானத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்ததால் பலத்த காயமின்றி நான் தப்பித்தேன். விமானத்தின் முன் பகுதியில் அமர்ந்திருந்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. என் தலையில் ஏதோ மோதியது, ஆனால் நான் வேறு எந்த காயமும் இல்லாமல் தப்பித்தேன். எங்கள் பக்கத்தில்கூட குழந்தைகள் இருக்கைகளில் இருந்து விழுந்தனர்” என்று அவர் மேலும் கூறினார்.
“நான் எனது பாதுகாப்பிற்காக எனது இருக்கையைப் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு எங்கேயும் விழாமல் இருக்க முயற்சித்தேன். அப்போது விமானத்தில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இப்போது வரை நான் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேறிவிட்டேன் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை” என்று ஜுனைத் தெரிவித்துள்ளார்.
அந்த விமானத்தில் பயணித்த மற்றொரு பயணியான ஜெயா என்பவர் கூறுகையில், “நான் பின் இருக்கையில் இருந்ததால் லேசான காயங்களுடன் தப்பினேன். விமானம் தரையிறங்கி ஓடுபாதையில் இருந்து விலகிச் செல்லும்போது அது ஒரு விபத்து என்பதை உணர ஆரம்பித்தோம். அதனை தொடர்ந்து சிறிது நேரத்திற்குள்ளேயே, எல்லாம் முடிந்துவிட்டது. நான் சீட் பெல்ட்டில் சிக்கிக்கொண்டேன், நகர முடியவில்லை. யாரோ எனது சீட் பெல்ட்டை அகற்றி விமானத்தில் இருந்து வெளியேற எனக்கு உதவி செய்தார்கள்” என்று அவர் கூறினார்.
விமான விபத்தில் இருந்து தப்பிய மற்றுமொரு பயணியான ஷம்சுதீன் டி.கே கூறுகையில், “நாங்கள் விமானத்தில் இறங்கத் தொடங்கும் வரை எந்தவொரு கவலையும் இல்லாமல் இருந்தோம். விமானம் இரண்டாவது முறையாக தரையிறங்க முயற்சித்த போது அதிகளவிலான சத்தம் கேட்டது. விமானம் அதி வேகத்துடன் செல்வதை என்னால் உணர முடிந்தது. விமானமானது கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் சென்று திடீரென அது ஓடுபாதையை விட்டு விலகி ஒரு பள்ளத்தில் விழுந்தது”.
“அதிர்ஷ்டவசமாக நானும் எனது இரண்டு நண்பர்களும் விமானத்தின் நடுப்பகுதியில் அமர்ந்திருந்தோம், நாங்கள் எங்கள் சீட் பெல்ட்களை அணிந்திருந்தோம். ஆனால் விமானம் இரண்டாகப் பிரிந்திருப்பதைக் கண்டவுடன், நாங்கள் அனைவரும் விமானத்திலிருந்து குதித்து வெளியேறினோம். விமானம் தீ பிடிக்காததால் நாங்கள் உயிர் பிழைத்தோம், இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என்பதை எங்களால் யூகிக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஷம்சுதீன் தற்பொழுது முழங்கையில் எலும்பு முறிந்த நிலையில், அவரது மற்ற இரண்டு நண்பர்களும் லேசான காயங்களுடனும் தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.