குவைத் : 100,000 வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விசாக்களை விற்பனை செய்த 450 போலி நிறுவனங்கள்..!! நாட்டை விட்டு வெளியேற்ற முடிவு..!!
குவைத் நாட்டில் இயங்கி வந்த போலியான நிறுவனங்களின் மூலம் வெளிநாட்டவர்களுக்கு விசாக்கள் விற்பனை செய்து வந்துள்ளது, தற்போது குவைத் அரசாங்கத்தால் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் விசாக்களை விற்பனை செய்யும் விசா வர்த்தகர்களைக் கட்டுப்படுத்தவும், போலி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளதால், இது போன்ற போலியான நிறுவனங்கள் மூலம் விசாக்களை பெற்ற சுமார் 100,000 வெளிநாட்டினர் குவைத்தை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக குவைத் நாட்டின் ஊடக நிறுவனம் (Al Qabas) ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குவைத் நாட்டில் இது போன்ற விசாக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் மொத்தம் 450 போலி நிறுவனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் மூலம் இதுவரையிலும் சுமார் 100,000 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் எனவும், பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் இந்த நிறுவனங்களில் ஒருபோதும் பணி புரிந்ததில்லை எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள 450 போலி நிறுவனங்களில் தற்போது 300 நிறுவனங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் விசாரணையில் இந்த நிறுவனங்களுக்கு எந்த ஒரு வணிக நடவடிக்கையும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய போலி நிறுவனங்களின் விசா தொடர்பான கோப்புகள் அனைத்தும் கட்டுப்பாடுகளுடன் மூடப்படும் எனவும், இந்த நிறுவனங்களிடமிருந்து விசாக்களை பெற்ற 100,000 தொழிலாளர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த போலி நிறுவனங்களிடம் இருந்து விசாக்களை பெற்று வெவ்வேறு துறைகளில் பணிபுரிந்து வந்த வெளிநாட்டு தொழிலாளர்களில் பலர், அரசின் கடுமையான சோதனைகளை தொடர்ந்து ஏற்கனவே குவைத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும், மற்றவர்கள் தங்கள் நாட்டிற்கு விமான சேவை தொடங்குவதற்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் இது குறித்து அரசின் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.