வளைகுடா செய்திகள்

வெளிநாட்டினர் குடியிருப்பு சட்டத்தில் கடுமையான மாற்றங்களைக் கொண்டு வரும் குவைத் அரசு..!! அமைச்சரவை ஒப்புதல்..!!

வளைகுடா நாடுகளில் வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளுள் ஒன்றான குவைத் நாடானது சமீப காலமாக வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், அந்நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு பதிலாக குடிமக்களை பணியமர்த்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, குவைத் நாட்டில் மில்லியன் கணக்கான வெளிநாட்டவர்கள் தங்குவதை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வெளிநாட்டு குடியிருப்பு வரைவு சட்டத்திற்கு ( foreign residency draft law) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நடைமுறையில் உள்ள சட்டமானது 51 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது என்றும் தற்போதைய சட்டத்தை நவீனமயமாக்கும் நோக்கில் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட புதிய குடியிருப்பு சட்டம் தேசிய நாடாளுமன்றத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

  • சட்டத்திற்கு புறம்பாக புதிய விசா எடுத்தல், விசாவை புதுப்பித்தல் அல்லது வேலை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபடும் விசா வர்த்தகர்கள் (Visa Traders) மற்றும் வெளிநாட்டவர்கள் அனைவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 5,000 முதல் 10,000 குவைத் தினார் வரை அபராதமும் விதிக்கப்படும்.
  • இந்த அபராதமானது சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஒவ்வொரு வெளிநாட்டவருக்கும் விதிக்கப்படும். வெளிநாட்டவர் அரசு துறை ஊழியராக இருந்தாலோ அல்லது ஐந்து வருடங்களுக்குள் மீண்டும் அதே தவறை செய்தாலோ தண்டனை இரட்டிப்பாகும்.
  • சட்ட விரோதமாக பணம் செலுத்தி பணி அனுமதி (work permit) அல்லது ரெசிடென்ஸ் விசாவினை புதுப்பித்தலில் ஈடுபடும் வெளிநாட்டவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் 1,000 குவைத் தினார் அபராதமும் விதிக்கப்படும்.
  • தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு சம்பளம் கொடுக்க தவறும் நிறுவனங்களுக்கு 5,000 குவைத் தினார் முதல் 10,000 குவைத் தினார் வரை அபராதமும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும். சட்டத்திற்கு புறம்பாக மற்றொரு நிறுவனத்திடம் பணி புரிபவர்களுக்கும் இதே தண்டனை வழங்கப்படும்.
  • நிறுவனங்கள் தங்களின் வெளிநாட்டு ஊழியர்கள் வேலையை விட்டு நீங்கி அல்லது அவர்கள் ரெசிடென்ஸ் விசாவை ரத்துசெய்தும், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றால் அதனை நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். விதிகளை மீறி தங்கும் நபர்களுக்கு 600 முதல் 2,000 குவைத் தினார் வரை அபராதம் விதிக்கப்படும்.
  • வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், தங்கள் குவைத் கணவர்களிடமிருந்து விவாகரத்து பெற்ற மற்றும் குழந்தைகளை வைத்திருக்கும் வெளிநாட்டு பெண்கள் அதே போல், குவைத் நாட்டு பெண்களின் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு 10 ஆண்டு ரெசிடென்ஸ் விசா வழங்கப்படும்.
  • நிறுவனத்தின் முதலாளியோ அல்லது ஊழியரோ அவர்கள் செலுத்தும் பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு சிறப்பு கட்டணங்களை அமல்படுத்தி அதன் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிதிஉதவி அளிப்பதன் பொருட்டு சிறப்பு நிதி (Special Fund) எனும் திட்டம் தொடங்கப்படும். இந்த சிறப்பு நிதியின் மூலம், நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் விமானக்கட்டணம் வழங்காத நிலையில், நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை தொடர்ந்து அவர்களுக்கு சம்பள நிலுவைத் தொகையை வழங்குவது, விமானப் பயணத்திற்கு கட்டணம் செலுத்துவது, வெளிநாட்டினர் யாரேனும் உயிரிழந்தால் அவர்களுக்கு பிளட்மணி (Blood Money) வழங்குவது உள்ளிட்டவற்றிற்கு இந்த சிறப்பு நிதி பயன்படுத்தப்படும்.
  • இந்த சிறப்பு நிதிக்கு தொழிலாளர்கள் தங்களின் ரெசிடென்ஸ் விசாக்களை பெறும்போது அல்லது மாற்றும் போது மற்றும் ஓட்டுநர் உரிமம் அல்லது கார் பதிவு பெறுதல் போன்றவற்றிற்கு 5 குவைத் தினார் சிறப்பு கட்டணமாகவும் மற்றும் இவையனைத்திற்கும் வருடாந்திர புதுப்பிப்பு மற்றும் குவைத்தில் வழங்கப்படும் விமான டிக்கெட்டுகள் ஆகியவற்றிற்கு 3 குவைத் தினார் சிறப்பு கட்டணமாகவும் வசூலிக்க இந்த வரைவு சட்டம் முன்மொழிகிறது.
  • மேலும், மின்சார ரசீதுகள், முதல் முறையாக சிவில் ஐடிகளை (Civil ID) பெறுதல் மற்றும் புதுப்பித்தல் மற்றும் இது போன்ற சில செயல்பாடுகளுக்கு 1 குவைத் தினார் கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • தனியார் மற்றும் எண்ணெய் துறைகளில் உள்ள நிறுவனங்கள் தனது ஒவ்வொரு ஊழியருக்கும் ரெசிடென்ஸ் விசாக்களைப் பெறுவதற்கு முன்னர் சுகாதார காப்பீட்டிற்கான (Health Insurance) பணம் செலுத்துவதில் உறுதி கொள்ள வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!