அபுதாபி, ஷார்ஜாவிலிருந்து பயணிக்க COVID-19 நெகடிவ் ரிசல்ட் கட்டாயம்..!! உறுதி செய்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள் அனைவரும், அவர்கள் புறப்படுவதற்கு முன்னர் கோவிட் -19 நெகடிவ் ரிசல்ட்டை செக்-இன் கவுண்டரில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஷார்ஜா விமான நிலையம் விமான நிறுவனங்களுக்கு அனுப்பியிருந்த சுற்றறிக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட உத்தரவுகளின்படி, ஷார்ஜா விமான நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து பயணிகளும் பயண நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட் -19 நெகடிவ் ரிசல்ட் வைத்திருக்க வேண்டும் என்பது உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அதில் தெரிவித்துள்ளது.
மேலும், பயணிகள் கொண்டுவரும் கோவிட் -19 நெகடிவ் ரிசல்ட்டை செக்-இன் கவுண்டரில் விமான நிறுவனங்கள் சேகரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. இந்த புதிய அறிவிப்பு குறித்து கால் சென்டர் முகவர்கள் உறுதிப்படுத்தியதுடன், இது தொடர்பாக அனைத்து விமான நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கால் சென்டர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதே போன்று அபுதாபியில், இரண்டு விமான நிறுவனங்கள் தங்களின் விமானங்களில் பயணிக்க கோவிட் -19 நெகடிவ் ரிசல்ட் வைத்திருப்பதை கட்டாயமாக்கியுள்ளன.
அபுதாபியிலிருந்து இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம், ஆகஸ்ட் 16 லிருந்து எதிஹாட் விமானத்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் விமானம் புறப்படும் நேரத்திற்கு அதிகபட்சம் 96 மணி நேரத்திற்கு முன்னர், அரசாங்க அங்கீகாரம் பெற்ற மருத்துவ மையத்திலிருந்து பெறப்பட்ட கோவிட் -19 நெகடிவ் ரிசல்ட்டை வைத்திருப்பது கட்டாயம் என தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து பயணிக்கும் பயணிகள் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மையத்திலிருந்து பெறப்பட்ட சோதனை முடிவை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
எதிஹாட் தவிர்த்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமும், அபுதாபியில் இருந்து புறப்படும் அதன் பயணிகளுக்கு இதேபோன்ற அறிவிப்பை வழியிட்டுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ஆகஸ்ட் 21 முதல், அபுதாபி விமான நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து பயணிகளுக்கும், புறப்படும் நேரத்திலிருந்து 96 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கோவிட் -19 நெகடிவ் ரிசல்ட் தேவை” என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.