துபாய் : அரசு துறை ஊழியர்களுக்கு அலுவலக வேலை நேரங்களில் சலுகை..!! DGHR சுற்றறிக்கை வெளியீடு..!!
துபாயில் அரசு துறைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வரும் ஆகஸ்ட் 16 ம் தேதி முதல் நெகிழ்வான வேலை நேரத்தை அமல்படுத்த இருப்பதாக துபாயின் மனிதவள ஆணையம் சனிக்கிழமை அறிவிதுள்ளது.
துபாய் அரசு மனிதவளத் துறை (Dubai Government Human Resources Department, DGHR) வெளியிட்ட சுற்றறிக்கையில், துபாயில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் காலை 6.30 மணி முதல் காலை 8.30 மணி வரையிலான நேரங்களில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தங்கள் வேலையைத் தொடங்கலாம் என்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வேலை நேரங்களின் (number of working hours) அடிப்படையில் ஊழியர்கள் தங்கள் வேலை நேரங்களை முடித்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பொதுமக்களுடன் தொடர்ச்சியான தகவல் தொடர்பு தேவைப்படுபவர்கள், ஷிப்டுகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு இந்த விதி பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசாங்க நிறுவனம் இந்த புதிய விதிமுறைகளை பயன்படுத்தும் போது அந்நிறுவனத்தின் சேவைகள் பாதிக்கப்படுமேயானால் அந்த நிறுவனங்களுக்கும் இது பொருந்தாது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
DGHR-ன் இயக்குநர் ஜெனரல் அப்துல்லா அலி பின் சயீத் அல் ஃபாலாசி அவர்கள் கூறுகையில், அரசாங்க ஊழியர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பதற்கும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் குறிப்பாக அவசர வானிலை நேரங்களில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “இந்த புதிய முயற்சியானது அலுவலகப் பணிகளுக்கு அனைவரும் ஒரே நேரத்தில் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். மேலும், உற்பத்தித்திறனை மேம்படுத்தும் மற்றும் ஊழியர்களுக்கான வேலை மற்றும் வாழ்க்கை ஆகியவற்றிற்கான சமநிலையை மேம்படுத்தும்” என்றும் கூறியுள்ளார்.
மேலும், அரசாங்க நிறுவனங்களின் மனிதவளத் துறைகள் (HR Department) உள் வருகை விதிமுறைகளைத் (internal attendance regulations) திருத்தி அவற்றை புதிய கொள்கையுடன் சீரமைக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.