UAE: விரைவில் துபாயில் இருந்து அபுதாபி, ஷார்ஜாவிற்கு இன்டெர்சிட்டி பேருந்து சேவை ஆரம்பம்..!! RTA தகவல்..!!
துபாயிலிருந்து அபுதாபி மற்றும் ஷார்ஜாவிற்கு இடையிலான இன்டெர்சிட்டி பேருந்து சேவைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் தொடங்க இருப்பதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (Roads and Transport Authority – RTA) இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 12) அறிவித்துள்ளது.
இதேபோன்று கொரோனாவின் பாதிப்பினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இன்டெர்சிட்டி பேருந்து சேவைகளில், துபாயிலிருந்து ராஸ் அல் கைமா மற்றும் துபாயிலிருந்து அஜ்மானுக்கு செல்லும் பேருந்து சேவைகளை RTA சமீபத்தில் மீண்டும் இயக்க தொடங்கியது. இந்த பேருந்து சேவைகளானது வழக்கமாக இயங்கும் நேர அட்டவணைப்படியே தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்பொழுது அமீரகத்தின் தலைநகரான அபுதாபிக்கும் மற்றும் துபாயின் அண்டை நகரான ஷார்ஜாவிற்கும் இன்டெர்சிட்டி பேருந்து சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக RTA தெரிவித்துள்ளது.
இது குறித்து RTA வெளியிட்ட செய்தியில், “இன்டர்சிட்டி பேருந்து சேவைகள் தற்போது ராஸ் அல் கைமா மற்றும் அஜ்மானில் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், RTA அமீரகத்தின் மற்ற பகுதியில் இருக்கும் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, தேவையான நெறிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்து, அபுதாபி மற்றும் ஷார்ஜாவிற்கு பேருந்து சேவைகளை விரைவாக தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளது.
கொரோனாவிற்கான தடுப்பு நடவடிக்கையாக துபாயில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இன்டெர்சிட்டி பேருந்து சேவைகளை தற்காலிகமாக RTA நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.