அனைத்து விசாக்களின் மூலமும் அமீரகம் வர கூடிய விரைவில் அனுமதி..!! இந்திய தூதர் தகவல்..!!
இந்தியாவிலிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் அமீரக ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள் மட்டும் தற்போது அமீரகம் திரும்ப அனுமதிக்கப்பட்டுவரும் வேளையில், கூடிய விரைவில் அனைத்து வகையான செல்லுபடியாகும் விசா வைத்திருப்பவர்களும் அமீரகம் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என இந்திய தூதர் பவன் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பவன் கபூர் இன்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஐக்கிய அரபு அமீரகம் சமீபத்தில் புதிய விசாக்களை வழங்கத் தொடங்கியுள்ளதால், செல்லுபடியாகும் அனைத்து வகையான விசாக்களைக் கொண்ட இந்தியர்களை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க இந்தியாவில் உள்ள அதிகாரிகளுக்கு நாங்கள் பரிந்துரை செய்துள்ளோம். கூடிய விரைவிலேயே அனுமதி தொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என நாங்கள் நம்புகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, தற்போதுள்ள விதிமுறை திருத்தப்பட்டால், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கக்கூடிய குடும்பங்களின் உறுப்பினர்கள் மற்றும் புதிய ரெசிடென்ஸ் விசாக்கள் வைத்திருப்பவர்கள் (பாஸ்ப்போர்ட்டில் அச்சடிக்கப்படாமல் இருக்கும் விசாக்கள்) ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகம் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், ‘வேலை தேடும்’ நோக்கத்திற்காக பயணிக்கத் திட்டமிடுபவர்களுக்கு இந்த விதிவிலக்கு பொருந்தாது என்றும் அவர் விளக்கியுள்ளார்.
Since the UAE has recently started issuing new visas, we have recommended to authorities in India to consider allowing Indians with valid visas to travel to the UAE. We are hopeful for an early decision.
— Amb Pavan Kapoor (@AmbKapoor) August 5, 2020
அமீரக குடியிருப்பாளர்களின் பிள்ளைகளில் பலரும் இந்தியாவில் உயர்கல்வி பயின்றுவரும் நிலையில், தற்போதுள்ள விதிமுறையின் காரணமாக அவர்கள் தங்களின் குடும்பத்தினருடன் இணைய முடியாத சூழல் இருந்து வருகிறது. இதனால் அமீரகத்தில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பலரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு வருகின்றனர்.
மேலும் ஐக்கிய அரபு அமீரகமும் தற்போது இந்தியா உட்பட அனைத்து நாட்டினருக்கும் விசிட் விசா மற்றும் டூரிஸ்ட் விசாவினை வழங்க தொடங்கியுள்ளது. இருப்பினும் இந்திய அரசு தற்போது அமீரகத்திற்கு பயணம் செல்ல தங்களின் பாஸ்ப்போர்ட்டில் செல்லுபடியாகும் விசா அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும் என அறிவித்திருப்பதால் புதிய ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள் கூட அமீரகம் செல்ல முடியாத சூழல் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா இடையிலான சிறப்பு விமான சேவைகள் ஆகஸ்ட் 31 ம் தேதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளதால், தற்போதய விதிமுறை திருத்தப்படும் பட்சத்தில் புதிய விசாக்களை கொண்டிருப்பவர்கள் மற்றும் அமீரக குடியிருப்பாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெரிதும் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.