சவூதி அரேபியா: பதுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான 8 டன் உணவு பொருட்கள்..!! நகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் பறிமுதல் ..!!
சவூதி அரேபியாவின் மேற்கு தமாம் நகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, 8 டன் அளவிலான காலாவதியான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை மேற்கொண்ட போது, அது ஒரு கிடங்காகவும், இனிப்பு உணவு வகைகள் தயாரிக்கும் தொழிற்சாலையாகவும் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக சவூதி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்கு தமாம் நகராட்சியின் தலைவர் பைசல் அல்-கஹ்தானி அவர்கள் இது பற்றி கூறுகையில், “நகராட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டு வணிக நிறுவனங்கள் செயல்படுவதை உறுதி செய்வதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சோதனை நடத்தப்பட்டது. ஆய்வுக் குழுக்கள், பாதுகாப்பு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், பிராந்தியத்தில் ஒரு வணிகப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சோதனை நடத்தியதில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன”, என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட உணவுப்பொருட்களில் கேக்குகள் மற்றும் இனிப்பு வகைகளில் பெரும்பாலானவை காலாவதி தேதிக்கு அப்பாற்பட்டது என்றும், நகராட்சியிடம் உரிமம் பெற்று செயல்படும் உணவு நிறுவனங்கள் நகராட்சி விதிமுறைகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து, உணவுப்பொருட்கள் தொடர்பான எந்தவொரு புகாரையும் அளிக்க விரும்பினால் பொதுமக்கள், கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு 940 அழைத்து நகராட்சிக்கு தெரியப்படுத்தலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஅதே போன்று, உணவு நிறுவனங்களும் தங்களது நிறுவனங்களில் சுகாதாரம் மற்றும் முறையான தயாரிப்பு விதிமுறைகளை கடைபிடித்து உணவுப்பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.