மார்ச் 1 க்கு பிறகு காலாவதியான விசாவுடன் அமீரகம் பயணிக்க அனுமதி.. துபாய் வந்தடைந்த பயணி தெரிவித்த தகவல்கள்..!!
இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே வந்தே பாரத் திட்டத்தின் மூலம் கடந்த ஜூலை மாதம் முதல் இந்தியாவிலிருந்து இயக்கப்படும் சிறப்பு விமானம் மூலம் செல்லுபடியாகும் ரெசிடன்ஸ் விசா வைத்திருக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் மட்டுமே அமீரகம் திரும்ப அனுமதிக்கப்பட்டு நிலையில், தற்போது GDRFA ஒப்புதல் பெற்று காலாவதியான விசாவுடன் அமீரகம் பயணிக்க இந்திய விமான நிலைய அதிகாரிகள் அனுமதி அளிப்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஜூலை மாதம் இந்தியாவிற்கும் அமீரகத்திற்கும் இடையே போடப்பட்ட விமான பயணம் தொடர்பான ஒப்பந்தத்தை தொடர்ந்து அமீரக குடியிருப்பாளர்கள் ICA / GDRFA அனுமதி பெற்று, கொரோனா நெகடிவ் சர்டிபிகேட்டுடன் அமீரகம் பயணிக்க இந்திய அரசு அனுமதி அளித்தது. எனினும், இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவில் தங்கியிருக்கும் குடியிருப்பாளர்களில் விசா காலாவதியானவர்கள் மற்றும் 6 மாதத்திற்கும் மேல் இந்தியாவில் தங்கியிருப்பவர்கள் அமீரகம் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை.
தற்போது ஆகஸ்ட் மாதம் தொடங்கியதிலிருந்து இந்தியா மற்றும் அமீரகம் ஆகிய இரு நாடுகளும் விமான பயணம் தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கி, செல்லுபடியாகும் அனைத்து விசா வைத்திருப்பவர்களும் அமீரகம் பயணிக்கலாம் எனவும், துபாய் தவிர்த்து அமீரகத்தின் மற்ற விசாக்களை கொண்டிருப்பவர்கள் அபுதாபி மற்றும் ஷார்ஜா விமான நிலையம் பயணிக்க ICA ஒப்புதல் பெற தேவை இல்லை எனவும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. எனினும், பயணம் செய்பவர்கள் தங்களின் பயண ஆவணங்களை சரிபார்த்துக்கொள்ள https://uaeentry.ica.gov.ae என்ற இணையதளத்தையும் தற்போது வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மார்ச் 1 க்கு பிறகு காலாவதியான விசாவினை வைத்திருக்கும் அமீரக குடியிருப்பாளர்களுக்கும், துபாய் திரும்புவதற்கான GDRFA ஒப்புதலை துபாய் அரசு வழங்கி வருவதும், GDRFA ஒப்புதலுடன் அமீரகம் திரும்ப இந்திய விமான நிலைய அதிகாரிகள் அனுமதித்திருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. மார்ச் 1 க்கு பிறகு காலாவதியான விசாவுடன் துபாய் திரும்பி வந்தடைந்த கார்த்திக் ஆறுமுகம் என்பவரும் இதனை கலீஜ் தமிழிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeதமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் ஆறுமுகம் இதுகுறித்து கலீஜ் தமிழிடம் கூறுகையில், “ஆண்டு விடுமுறைக்காக இந்தியா சென்றிருந்த நிலையில், கொரோனாவின் காரணமாக அமீரகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் என்னால் அமீரகம் திரும்ப முடியவில்லை” என்றார்.
மேலும் “ஜூலை மாதத்தில் இந்தியாவிலிருந்து குடியிருப்பாளர்கள் அமீரகம் திரும்ப அனுமதிக்கப்பட்டாலும், செல்லுபடியாகும் விசா வைத்திருக்க வேண்டும் என இந்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் என்னுடைய விசா ஜூலை 8 ம் தேதி காலாவதியாகிவிட்டது. இதனால் அமீரகம் பயணிக்க என்னை அனுமதிப்பார்களா இல்லையா என்ற பெரும் குழப்பத்தில் இருந்தேன். ஏனெனில் மார்ச் 1 க்கு பிறகு விசா காலாவதியாகி வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு இறுதி வரையிலும் விசா நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமீரக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது” என்றும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், பெரும் குழப்பத்திற்கு மத்தியிலும், துபாய் திரும்புவதற்கு தேவையான GDRFA ஒப்புதல் பெறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்ததாகவும், கடந்த ஜூலை 25 ம் தேதி இறுதியாக GDRFA ஒப்புதல் வேண்டி விண்ணப்பித்த நிலையில் ஜூலை 29 ம் தேதி GDRFA விடமிருந்து பயண அனுமதி ஒப்புதல் கடிதம் பெற்றதாகவும் தெரிவித்தார். GDRFA ஒப்புதல் பெற்ற நிலையில், அமீரகம் திரும்ப ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் டிக்கெட் புக் செய்து, நேற்று ஆகஸ்ட் 13 ம் தேதி திருச்சியிலிருந்து துபாய் டெர்மினல் 2 சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கியதாகவும் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் காலாவதியான விசா குறித்து ஏதாவது விசாரித்தார்களா என்று நாம் கேட்டதற்கு பதிலளித்த அவர், பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் செய்யப்பட்டிருந்த விசா காலாவதியாகி இருப்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கேட்டதாகவும், GDRFA ஒப்புதல் படிவத்தை கண்டவுடன் பயணத்திற்கு அனுமதித்ததாகவும் கூறினார். மேலும் COVID-19 நெகடிவ் ரிசல்ட் மற்றும் சுய அறிவிப்பு படிவம் ஆகிய இரண்டையும் விமான நிலைய அதிகாரிகள் சரிபார்த்த பின்னரே அனுமதி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
விசா கலவாதியானவர்கள் அமீரகம் திரும்பி வர அனுமதிக்கப்படுவார்களா என அமீரக குடியிருப்பாளர்களிடையே பல்வேறு சந்தேகங்கள் இருந்து வந்த நிலையில், தற்போது ஜூலை 8 ம் தேதி விசா காலாவதியான நிலையிலும், ஜூலை 29 ம் தேதி GDRFA அனுமதி பெற்று கார்த்திக் ஆறுமுகம் நேற்று (ஆகஸ்ட் 13) துபாய் வந்தடைததன் மூலம் அனைவரின் குழப்பமும் தீர்ந்துள்ளது. மேலும் கார்த்திக் ஆறுமுகம் அவர்களின் காலாவதியான விசா, GDRFA அனுமதி மற்றும் புறப்பாடு, வருகை ஸ்டாம்ப் உள்ளிட்ட தகவல்கள் கலீஜ் தமிழ் குழுவினரால் சரிபார்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.