UAE : 750க்கும் மேற்பட்டோர் தூதரகத்தில் பொதுமன்னிப்பு வேண்டி விண்ணப்பம்..!! இதுவரையிலும் விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்க தூதரகம் அறிவுரை..!!

மார்ச் 1 ம் தேதிக்கு முன்னர் காலாவதியான ரெசிடென்ஸ் மற்றும் விசிட் விசா வைத்திருக்கும் நபர்கள், ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வரும் ஓவர்ஸ்டே அபராதம் தள்ளுபடி செய்யப்பட்டு பொதுமன்னிப்பு வழங்கப்படும் திட்டத்தைப் பெற விரும்பும் இந்தியர்கள் அபுதாபி மற்றும் துபாயில் உள்ள இந்திய தூதரகங்களில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடந்த வாரம் அறிவுறுத்தப்பட்டது.
அமீரகத்தில் பொதுமன்னிப்பு வேண்டுபவர்கள் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை அணுகி உதவி பெறலாம் என்று தூதரகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்ததை தொடர்ந்து தற்பொழுது வரை 750 க்கும் மேற்பட்ட அபராதத் தள்ளுபடிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய துணை தூதரகம் அறிவித்துள்ளது.
அவற்றில் ஒரு சில விண்ணப்பங்களைத் தவிர்த்து மொத்தம் 146 விண்ணப்பங்கள் பொது வதிவிட மற்றும் வெளியுறவு இயக்குநரகம் (GDRFA) மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக துணைத்தூதரகத்தின் பத்திரிகை, தகவல் மற்றும் கலாச்சாரத் தூதர் நீரஜ் அகர்வால் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அகர்வால் மேலும் கூறுகையில், “ஜூலை 23 முதல் 28 வரையிலான நாட்களில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கான ஒப்புதல்கள் கிடைத்துள்ளன. ஈத் அல் அத்ஹா விடுமுறைகள் முடிந்ததன் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கும் விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். விண்ணப்பித்தவர்களில் ஒரு சில நபர்கள் மட்டுமே கைரேகை பதிவிற்காக திரும்ப அழைக்கப்பட்டனர்” என்று கூறியுள்ளார்.
விண்ணப்பதாரர்களுக்கு தனிப்பட்ட அழைப்புகள் வருவதால் விண்ணப்பித்த அனைத்து நபர்களும் தங்களது மொபைல் போன்களை எப்பொழுதும் செயல்பாட்டில் வைத்திருக்கும் படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ஒப்புதல்களைப் பெற்றவர்கள் அமீரகத்தை விட்டு விரைவில் வெளியேறுமாறும், பொதுமன்னிப்பிற்கான ஒப்புதல் பெறுவதற்கு குறைந்தது ஐந்து வேலை நாட்கள் எடுக்கும் என்பதால் விண்ணப்பிக்காதவர்கள் இறுதி நாள் (ஆகஸ்ட் 17) வரையிலும் காத்திருக்காமல் விரைவில் விண்ணப்பிக்கும் படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம், பொது மன்னிப்பிற்காக தூதரகத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது பயண தேதிக்கு குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்னதாக பொது மன்னிப்பு வேண்டி விண்ணப்பிக்க வேண்டும் என்று தூதரகம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.