அபுதாபி பிக் டிக்கெட் டிராவில் 12 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை வென்ற இந்தியர்..!!
ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வரும் அபுதாபி பிக் டிக்கெட்டின் ரேஃபிள் டிராவில் வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகையும், விலையுயர்ந்த வாகனங்களும் பரிசாக வழங்கப்பட்டு வருவது வழக்கமான ஒன்று. இந்த மாதத்திற்கான ரேஃபிள் டிராவானது இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் துபாயை சேர்ந்த இந்தியர் தீபங்கர் டே என்பவர் 12 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை தட்டி சென்றுள்ளார்.
துபாயில் வசித்து வரும் இவர், கடந்த ஜூலை 14 அன்று தனது அலுவலகத்தில் பணிபுரியும் சக தொழிலாளர்களுடன் இணைந்து பிக் டிக்கெட்டை வாங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “நான் அபுதாபி பிக் டிக்கெட்டில் வெற்றி பெற்றதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த டிக்கெட்டை எனது சக ஊழியர்களுடன் இணைந்து வாங்கியிருந்தேன். எனவே, எனக்கு கிடைத்த பரிசுத்தொகையை மற்ற 11 நபர்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன். மிக்க நன்றி” என்று கூறியுள்ளார்.
மேலும், இன்று நடைபெற்ற பிக் டிக்கெட் டிராவில் அறிவிக்கப்பட்ட ஆறு ரொக்கப் பரிசுகளையும் இந்திய நாட்டை சேர்ந்தவர்களே வென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதத்திற்கான பிக் டிக்கெட்டில் முதன்முறையாக முதல் வெற்றியாளருக்கு 10 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையும், இரண்டாவது வெற்றியாளருக்கு 1 மில்லியன் பரிசுத்தொகையும் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை www.bigticket.ae என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 31 ம் தேதி வரை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.