குவைத் : ஆகஸ்ட் 18 முதல் ஆரம்பமாகும் நான்காம் கட்ட தளர்வு..!!
குவைத்தில் கொரோனாவின் பாதிப்பால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் பல கட்டங்களாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது வரும் ஆகஸ்ட் 18 ம் தேதி முதல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான நான்காவது கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குவைத் நாட்டின் அமைச்சரவை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
நான்காம் கட்டத்தில் சலூன் கடைகள் மற்றும் ஜிம் போன்றவை திறக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் உணவகங்களில் சுகாதார நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு கூடுதல் சேவைகளை வழங்க அனுமதி அளிக்கப்படும் என்றும் அமைச்சரவை தெரிவித்துள்ளது.
மேலும் தற்பொழுது அமலில் இருக்கும் ஆறு மணி நேர ஊரடங்கானது குறைந்தபட்சம் இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் தாரெக் அல் மஸ்ரெம் அவர்கள் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐந்தாவது கட்டத்தில் செயல்படுத்தப்பட திட்டமிட்டிருந்த சில நடவடிக்கைகளை தற்பொழுது நான்காவது கட்டத்திலேயே செயல்படுத்த அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாகவும் மஸ்ரேம் அவர்கள் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 18 முதல் தொடங்கப்படவுள்ள நான்காம் கட்டத்தில் விளையாட்டு மற்றும் சுகாதார கிளப்புகள், தனிநபர் பராமரிப்பு கடைகள், முடிதிருத்தும் கடைகள் மற்றும் சுகாதார தயாரிப்புக் கடைகள் (health product shops) போன்ற நடவடிக்கைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கொரோனாவின் தாக்கத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்த பொது பேருந்து சேவைகளானது கடுமையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி மீண்டும் இயங்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தனியார் துறை நிறுவனங்கள் சுகாதார நிலைமைகளை கவனத்தில் கொண்டு, 50 சதவீதத் திறனிற்கும் மேல் இயங்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.