வளைகுடா செய்திகள்

அரசு துறைகளில் வெளிநாட்டினரை பணிநீக்கம் செய்ய தொடங்கிய குவைத் அரசு.. 3 மாதங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவரை பணிநீக்கம் செய்ய திட்டம்..!!

குவைத் நாட்டின் அரசாங்க துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோரை பணிநீக்கம் செய்யப்போவதாக குவைத் அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்று முதல் அதனை குவைத் அரசு நடைமுறைப்படுத்த தொடங்கியிருப்பதாக குவைத் நாட்டின் செய்தி நிறுவனம் (அல் ராய்) இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அல் ராய் வெளியிட்டிருக்கும் செய்தியில், “அரசாங்க நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டினரை பணிநீக்கம் செய்வதற்கான செயல்முறை படிப்படியாக நடக்கும். மேலும் இதனால் அரசாங்க துறைகளில் வேலை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய பணிநீக்கம் தொடர்பாக நாங்கள் அவர்களுக்கு முன்அறிவிப்பு செய்வோம்” என்று அரசின் சார்பாக கூறப்பட்டதாக தெரிவித்துள்ளது.

அரசாங்க ஒப்பந்தக்காரர்களால் பணியமர்த்தப்பட்ட துணை ஒப்பந்தக்காரர்களுக்காக பணிபுரியும் வெளிநாட்டவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் வரும் 3 மாதங்களில் படிப்படியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என குவைத் அரசு கூறியுள்ளது. அரசாங்கத்தால் நேரடியாக பணியமர்த்தப்பட்ட வெளிநாட்டவர்களை பொறுத்தவரை, அவர்கள் ஏற்கனவே அரசாங்க அமைச்சகங்களுக்கு துணை ஒப்பந்தக்காரர்களாக இருக்க கூடிய நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குவைத் பாராளுமன்ற மனித வள மேம்பாட்டுக் குழுவின் தலைவர் எம்.பி. கலீல் அல் சலேஹ் அவர்கள் “குவைத் நாட்டின் மொத்த மக்கள்தொகை எண்ணிக்கையில் வெளிநாட்டினருக்கும் குவைத் குடிமக்களுக்கும் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்விற்கு தீர்வு காண, இந்த குழு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அடுத்த வாரம் நடைபெற திட்டமிட்டிருக்கும் கூட்டத்தில் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு குறித்த தரவு மற்றும் புள்ளிவிவரங்களுடன் ஒரு அறிக்கையை தேசிய சட்டமன்றத்தில் நாங்கள் முன்வைப்போம்” என்று அல் ராய் ஊடகத்திடம் கூறியுள்ளார்.

கடந்த 2019 ம் வருடத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, அரசு துறைகளில் பணிபுரிந்த 3 லட்சம் ஊழியர்களில் சுமார் 1.2 லட்சம் பேர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குவைத் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 70 சதவீதத்தினர் வெளிநாட்டினர்களாகவும், 30 சதவீதத்தினர் குவைத் நாட்டு குடிமக்களாகவும் இருந்து வந்த நிலையில், இந்த மக்கத்தொகை ஏற்றத்தாழ்வை சரிசெய்யும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை குவைத் அரசாங்கம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கைகளில், வெளிநாட்டினர்களின் எண்ணிக்கையை 70 லிருந்து 30 சதவீதமாக குறைப்பதற்கும், அரசாங்க அமைச்சகங்களில் பணிபுரியும் வெளிநாட்டினர்களில் 50 சதவீதத்தினர்களை பணிநீக்கம் செய்வதற்கும் குவைத் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு தற்போது அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!