ஓமான்: வெளிநாட்டு ஊழியர்கள் உரிமம் பெற்ற முதலாளியுடன் மட்டுமே பணிபுரிய வேண்டும்..!! மீறினால் கடும் தண்டனை..!!

ஓமான் நாட்டில் பணிபுரியும் ஒரு வெளிநாட்டு ஊழியரை அவரின் முதலாளி வேறொரு நபருக்காக வேலைக்கு விட்டுச் செல்வது குற்றம் என்று ஓமானின் பொது வழக்கு விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. இது போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு மாத சிறைத்தண்டனையும், 1000 ஓமான் ரியால் அபராதமும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனையானது ஒரு ஊழியர் என்ற அடிப்படையில் கணக்கில் கொள்ளப்படும் எனவும், ஒன்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை இது போன்று வேறொருவருக்கு வேலைக்காக விட்டிருந்தால், அந்த முதலாளிக்கு ஊழியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படும் எனவும் ஓமான் பொது வழக்கு விசாரணை ஆணையம் கூறியுள்ளது.
மேலும் இதே போன்று அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து உரிய அனுமதி இல்லாமல் ஒரு வெளிநாட்டவர் பணிபுரிவது அல்லது ஒரு வெளிநாட்டு ஊழியர் பணி உரிமம் பெற்ற முதலாளியைத் தவிர வேறு ஒருவருக்காக வேலை செய்வது போன்றவையும் குற்றம் எனவும் இந்த குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு 800 ஓமான் ரியால் அபராதமும், ஒரு மாத சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அத்துடன் அவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் எனவும் நாட்டிற்கு திரும்பி வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.