அமீரக செய்திகள்

வாகனம் பதிவு செய்யும் முறையில் புதிய மாற்றம் கொண்டு வரும் ஷார்ஜா..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக வாகனம் வாங்குபவர்கள் அனைவரும் வாகனப் பதிவு (Mulkia) செய்திருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு வருடமும் வாகன ஓட்டிகள் தங்களின் வாகனப் பதிவை புதுப்பித்தல் அவசியம். தற்பொழுது அமீரகத்தில் உள்ள ஷார்ஜா அரசானது வாகனப்பதிவில் ஒரு புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஷார்ஜாவில் புதிதாக வாகனம் வாங்குவோர் தங்களின் வாகனங்களுக்கான பதிவு உரிமத்தை இரண்டு ஆண்டுகளுக்கு பெற்றுக்கொள்ளலாம் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஷார்ஜா காவல்துறையில் உள்ள வாகனங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமத் துறை, தனிநபர்களுக்காக புதிதாக வாங்கிய இலகுரக வாகனங்களின் (Light Vehicle) இரண்டு ஆண்டு வாகன பதிவு உரிமத்தை தற்பொழுது வழங்கி வருவதாகவும், அதே நேரத்தில் வாகன உரிமையாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்குண்டான செல்லுபடியாகும் காப்பீட்டைப் (Insurance) பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்ககளின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் உயர்தர சேவைகளை வழங்குவதற்கான அதிகாரிகளின் திட்டங்களுக்கு ஏற்ப இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஷார்ஜா காவல்துறையின் தளபதி மேஜர் ஜெனரல் சைஃப் அல்-ஸாரி அல் ஷம்ஸி அவர்கள் கூறுகையில், “இந்த புதிய முயற்சியானது தரம், செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் தரங்களுக்கு ஏற்ப அனைத்து நிர்வாக சேவைகளையும் வழங்குவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த புதிய சேவையைப் பெறுவதற்கு, வாகன உரிமையாளர் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் காப்பீட்டு ஆவணத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனவும் சேவைக்கு தேவையான கட்டணங்களை செலுத்த வேண்டும் என்றும் வாகன மற்றும் ஓட்டுநர் உரிமத் துறையின் இயக்குநர் லெப்டினென்ட் கேல் கலீத் அல்-கை அவர்கள் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்த புதிய வாகன பதிவு சேவையை விருப்பமுள்ளவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கலாம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஒரு ஆண்டிற்கு மட்டுமே வாகன பதிவு உரிமம் வழங்கப்பட்டு வரும் வேளையில், ஷார்ஜாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த புதிய இரு ஆண்டுகளுக்கான வாகன பதிவு உரிமமானது ஐக்கிய அரபு அமீரகத்திலேயே இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!