நடிகர் சோனு சூட் ஏற்பாடு செய்த தனி விமானத்தில் மாஸ்கோவிலிருந்து சென்னை திரும்பிய தமிழக மாணவர்கள்..!! நெட்டிசன்களின் பாராட்டு மழையில் சோனு சூட்..!!

இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட சர்வதேச விமான போக்குவரத்து தடையால் இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையேயான போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டதை தொடர்ந்து, வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள், வசிப்பவர்கள், உயர்கல்வி கற்பவர்கள் என ஏராளமான இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வந்த நிலையில், அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரும் பொருட்டு வந்தே பாரத் எனும் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.

உலகின் பல நாடுகளுக்கும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் விமானம் இயக்கப்பட்ட நிலையில், ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிலிருந்து தமிழ்நாட்டிற்கு கடந்த ஜூலை மாதம் முதல் வாரத்திற்கு பிறகு எந்த ஒரு விமானமும் இயக்கப்படாததால் அங்கு மருத்துவ படிப்பு பயில்வதற்காக சென்று தற்போது இந்தியா திரும்பமுடியாமல் மாஸ்கோவில் சிக்கித்தவித்த தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 90 மாணவர்கள் தமிழகம் திரும்புவதற்கு பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவி செய்திருக்கும் செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மாஸ்கோவிலிருந்து தமிழகத்திற்கு சிறப்பு விமானங்கள் ஏதும் இயக்கப்படாததால், தமிழகம் திரும்பிவர தங்களுக்கு உதவுமாறு MBBS பட்டதாரி மாணவர்கள், நடிகர் சோனு சூட்டிடம் உதவி கேட்டுள்ளனர். இதனையடுத்து உடனடியாக அவர்கள் தமிழகம் திரும்பி வருவதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கிய சோனு சூட், ஆகஸ்ட் 4 ஆம் தேதி சார்ட்டர் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்ய திட்டமிட்டு அதன்படி நேற்று தமிழக மாணவர்கள் அனைவரும் மாஸ்கோவிலிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை பாதுகாப்பாக சென்னைக்கு திரும்பியுள்ளனர்.

பல நாட்களாக சிக்கித்தவித்த மாணவர்களுக்கு அரசிடமிருந்து எந்த ஒரு உதவியும் கிடைக்காதபட்சதில், தங்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக சென்னைக்கு திரும்ப சார்ட்டர் விமானம் ஏற்பாடு செய்து கொடுத்த நடிகர் சோனு சூட்டிற்கு அனைத்து மாணவர்களும் முழு மனதுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

சினிமாவில் அனைவராலும் வில்லனாக அறியப்பட்ட நடிகர் சோனு சூட் நிஜ வாழ்க்கையில் அனைவருக்கும் குறிப்பாக இந்திய இளைஞர்கள் மத்தியில் ஹீரோவாக வலம் வருகிறார். இந்தியாவில் ஊரடங்கின் காரணமாக பெரிதும் அவதிப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப நேரடியாக வீதிக்குச் சென்று அனைவருக்கும் உதவிய சோனு சூட், இன்று வரையிலும் தனது சமூக பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தற்போது தமிழக மாணவர்கள் சென்னை திரும்பிவர உதவியதை அறிந்த அவரின் ரசிகர்களும், இளைஞர்களும், நெட்டிசன்களும் அவரின் செயலை பாராட்டி வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.