அமீரக செய்திகள்

துபாய் விசிட் விசாவிற்கு கடைசி நாள் ஆகஸ்ட் 10.. Youtube, TikTok ல் வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்.. பயண முகவர்கள் தெரிவித்த தகவல்கள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து, மார்ச் 1 ம் தேதிக்குப் பிறகு காலாவதியான விசிட் விசா மற்றும் அமீரக ரெசிடென்ஸ் விசாக்கள் வைத்திருப்பவர்களின் விசா செல்லுபடியாகும் காலம் இந்த ஆண்டு இறுதி வரையிலும் நீட்டிக்கப்படும் என அமீரக அரசு அறிவித்திருந்தது.

அமீரக அரசு மேற்கொண்ட பல கட்ட நடவடிக்கைகளின் பலனாக கொரோனா தொற்று பெருமளவில் குறைந்து இயல்புநிலை திரும்பியதை தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதி வரை விசா செல்லுபடியாகும் என்ற அறிவிப்பு விலக்கிக்கொள்ளப்படுவதாகவும், மார்ச் 1 க்கு பின்னர் காலாவதியான விசாக்களை கொண்டிருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படுவதாகவும், அதன்படி ஆகஸ்ட் மாதம் 10 ம் தேதிக்குள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் கடந்த ஜூலை மாதம் 12 ம் தேதி அமீரக அமைச்சரவை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், காலாவதியான அமீரக விசா செல்லுபடிக்காலம் குறித்து பல்வேறு தவறான தகவல்கள் TikTok மற்றும் Youtube போன்ற தளங்களில் பல்வேறு நபர்களால் பரப்பப்பட்டு வருவதாக அமீரகத்தில் இயங்கிவரும் முன்னணி டிராவல் ஏஜென்ட்டினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், விசா செல்லுபடி காலம் குறித்து சரியான புரிதல் இல்லாததன் காரணமாக முரண்பட்ட தகவல்களை வழங்கி வருவதாக கூறியுள்ளனர். குறிப்பாக மலையாளம், ஹிந்தி, உருது மற்றும் தமிழ் மொழிகளில் இயங்கிவரும் இவ்வாறான வீடியோ வலைதள பக்கங்கள் இவ்வாறான தகவல்கள் மூலம் மக்களை குழப்பி வருவதாகவும் கூறியுள்ளனர்.

விசா செல்லுபடி காலம் குறித்து பயண முகவர்கள் தெரிவிக்கும்போது, “மார்ச் 1 க்குப் பிறகு அமீரக விசாக்கள் காலாவதியானவர்கள் செப்டம்பர் வரை இலவசமாக இருக்க முடியும், அதன் பிறகு அவர்கள் விசாக்களை புதுப்பிக்க முடியும்.” என்று ஒரு Youtube தளத்தில் ஒருவர் கூறியுள்ளார். உண்மை என்னவெனில், ஆகஸ்ட் 10 ம் தேதிக்குப் பிறகு ஒரு மாதம் சலுகை காலம் பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று மட்டுமே ஜூலை 18 ம் தேதி ICA அறிவித்திருந்தது. எனினும் அதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்ற வழிமுறை இதுவரையிலும் தெரிவிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளனர்.

மேலும், “இந்த ஒரு மாத சலுகை காலம் அபுதாபி விசிட் விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும், துபாய் விசிட் விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது. துபாய் விசிட் விசா வைத்திருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற ஆகஸ்ட் 10 ம் தேதியே கடைசி நாள். ஆகஸ்ட் 10 ம் தேதிக்கு பின்னரும் நாட்டை விட்டு வெளியேறாதவர்களுக்கு ஓவர்ஸ்டே அபராதம் ஜூலை 12 முதல் கணக்கில்கொள்ளப்படும்” எனவும் அறிவுறுத்தியுள்ளனர். அபராத தொகையானது முதல் நாளில் மட்டும் 200 திர்ஹம்ஸ் எனவும், இரண்டாவது நாளிலிருந்து 100 திர்ஹம்ஸ் எனவும் கணக்கிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கூறும்போது, விசிட் விசாக்களை நீட்டிப்பதற்கான கட்டணம் தொடர்பாகவும் பல தவறான தகவல்களை Video Bloggers பரப்பி வருகின்றனர். உண்மையாதெனில், அமீரகத்தில் விசிட் விசாக்களின் கட்டணம் ஒவ்வொரு நகரத்தை பொறுத்து மாறுபடும் என்றும், மேலும் சாதாரணமாக வசூலிக்கக்கூடிய விசிட் விசா கட்டணத்துடன், தற்போது உள்நாட்டிலிருந்து விசாக்களை நீட்டிப்பு செய்வதால் விண்ணப்பதாரர்களின் விசா நிலைய மாற்றுவதற்கு தோராயமாக 550 திர்ஹம்ஸ் கூடுதலாக சேர்த்து வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

 

 

source : Khaleej Times

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!