UAE விமானங்கள் மூலமும் இந்தியாவிலிருந்து அமீரகம் திரும்பலாம்..!! ஆகஸ்ட் 15 வரை சிறப்பு விமானம் இயக்க NOC வழங்கியுள்ளதாகவும் துணை தூதரகம் தகவல்..!!

இந்தியாவில் சிக்கித் தவிக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் இன்று (ஆகஸ்ட் 1) முதல் ஐக்கிய அரபு அமீரகத்தை சார்ந்த விமானங்கள் மூலமாகவும் அமீரகம் திரும்பலாம் என துபாயில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி டாக்டர் அமன் பூரி நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்ததாக அமீரக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியர்களை திருப்பி அனுப்புவதற்கான சிறப்பு விமான சேவைகளை வழங்கும் அனைத்து ஐக்கிய அரபு அமீரக விமான நிறுவனங்களும், ஆகஸ்ட் 15 வரை இந்தியாவில் சிக்கித் தவிக்கும் அமீரக குடியிருப்பாளர்களை திரும்ப அழைத்து வர முடியும் என்றும் அமன் பூரி தெளிவுபடுத்தியதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து அந்த செய்தியில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் தவிக்கும் இந்திய நாட்டவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதற்காக, சிறப்பு விமானம் இயக்க அனுமதி கோரும் ஐக்கிய அரபு அமீரகத்தை சார்ந்த விமானங்களுக்கு, துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தடையில்லா சான்றிதழ் (No Objection Certificate- NOC) வழங்கி வருகிறது. இதற்காக அமீரக விமானங்களுக்கு நாங்கள் பல NOC களை வழங்கியுள்ளோம்” என அவர் மேலும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் கீழ் சிறப்பு விமானம் இயக்க, அமீரகத்தை சார்ந்த ஒரு விமான நிறுவனத்திற்கு மட்டுமே 57 விமானங்களை இயக்குவதற்கான NOC’s வழங்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு விமானம் இயக்க விண்ணப்பிக்கும் அமீரக விமான நிறுவனங்களுக்கு நாங்கள் உரிய நேரத்தில் ஒப்புதல்களை வழங்குகிறோம்” என்றும் அவர்அதில் கூறியுள்ளார்.
திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் கீழ் இயக்கப்படும் இந்த சிறப்பு விமானங்களுக்கு, ஐக்கிய அரபு அமீரக கேரியர்களின் வலைத்தளங்கள் மூலமாகவோ அல்லது பயண முகவர்கள் மூலமாகவோ பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனவும், இந்த சிறப்பு விமானங்களை இனிமேல் சமூக அமைப்புகளின் மூலமாகவோ அல்லது நிறுவனங்கள் மூலமாகவோ இயக்க அவசியமில்லை என்றும் அவர் அமீரக ஊடகத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இதற்கு முன்பு வரையிலும், சமூக அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் மூலமாக மட்டுமே அமீரகத்திலிருந்து சிறப்பு விமானங்களை இயக்க இந்திய தூதரகம் அனுமதி அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Source : Gulf News