அமீரகத்தில் கட்டப்பட்டுவரும் அரபுலகின் முதல் அணுமின் நிலையத்தில் முழுமையாக இயங்க தொடங்கிய 1 வது யூனிட்..!!
அரபு நாடுகளிலேயே தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக இருக்கக்கூடிய ஐக்கிய அரபு அமீரகம், தனது நாட்டில் கடந்த சில வருடங்களாக கட்டப்பட்டுவந்த அரபுலகின் முதல் அணு மின் நிலையமான “பராக்கா அணுமின் நிலையத்தை (Baraka Nuclear Power Plant – BNPP)” நேற்று (ஆகஸ்ட் 1) முதல் இயங்க தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அபுதாபியில் இருக்கக்கூடிய அல்-தஃப்ரா பிராந்தியத்தின் பராக்கா எனும் பகுதியில் கட்டப்பட்டு வரும் இந்த அணுமின் நிலையம் மொத்தம் நான்கு யூனிட்களை கொண்டுள்ளது. அதில் 1 மற்றும் 2 வது யூனிட்டின் கட்டுமான பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான எரியூட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில், தற்போது நேற்று முதல் 1 வது யூனிட் முழுமையாக இயங்க தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படா வண்ணம் தூய்மையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணுமின் நிலையம், அடுத்த 60 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் கூறுகையில், “அரபு உலகில் முதல் மாசற்ற அணுசக்தி மின் நிலையத்தை இயக்குவதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றியை இன்று நாங்கள் அறிவிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், மின்சாரம் தயாரிப்பதற்கான அணு எரிபொருள் ஏற்றம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பான, தூய்மையான மற்றும் நம்பகமான மின்சாரத்தை உருவாக்க அணுசக்தி உலையை உருவாக்கிய ஐக்கிய அரபு அமீரகம், அரபு பிராந்தியத்தில் முதலாவது மற்றும் உலகின் முப்பத்தி மூன்றாவது நாடாகும். மேலும் இந்த அணுமின் நிலையம் கொரியா எலக்ட்ரிக் பவர் கார்பொரேஷன் (KEPCO) எனும் கொரிய நாட்டின் அரசு நிறுவனத்தின் மூலம் கட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
பராக்காவில் அமைக்கப்படும் இந்த அணுமின் நிலையம் முழுமையாக இயங்கியத் துவங்கினால், அது 5.6 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்றும் அதே நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் 21 மில்லியன் டன்களுக்கும் அதிகமான கார்பன் வெளியேற்றத்தை தடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்பன் வெளியேற்றமானது, அமீரக சாலைகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 3.2 மில்லியன் கார்களை அகற்றுவதற்கு சமம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து எமிரேட்ஸ் அணுசக்தி கழகத்தின் (ENEC) தலைமை நிர்வாக அதிகாரி முஹம்மது அல் ஹம்மாதி அவர்கள் கூறும்போது, “பராக்கா அணுசக்தி ஆலையானது தேசத்தின் வளர்ச்சியின் ஒரு முக்கிய பங்காக மாறியுள்ளது. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் 25 சதவீத மின்சாரத்தை பூஜ்ஜிய கார்பன் உமிழ்வுடன் வழங்கும். அதே நேரத்தில் ஒரு நிலையான உள்ளூர் அணுசக்தி தொழில் மற்றும் மின்சார விநியோகத்தை நிறுவுவதன் வாயிலாக ஆயிரக்கணக்கான உயர் மதிப்புள்ள வேலைகளை உருவாக்குவதன் மூலமும் பொருளாதார முன்னேற்றத்திற்கு இது பெரிதும் உதவும்” என்றும் கூறியுள்ளார்.
பராக்கா அணுமின் நிலையமானது அனைத்து ஒழுங்குமுறை தேவைகளையும் பூர்த்தி செய்வதையும், மேலும் அணுஉலையின் பாதுகாப்பு மற்றும் தரம் மிக உயர்ந்த சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்த, இந்த அணுசக்தி ஆலையின் செயல்பாடுகள் அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சோதிக்கப்படும் என்று தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.