அமீரக செய்திகள்

கொரோனா விதிமீறலுக்கு 100,000 திர்ஹம்ஸ் வரை அபராதம்.. 6 மாத சிறை தண்டனை.. முழு அபராத பட்டியல் இதோ..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இயல்பு நிலை மீண்டும் திரும்பினாலும் பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

மேலும், சமீப காலமாக அமீரகத்தில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட கொரோனா பாதிப்புகளானது தற்பொழுது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், ஐக்கிய அரபு அமீரக சுகாதார அதிகாரிகள் பொதுமக்கள் அனைவரும் கொரோனாவிற்கான தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மீறும் எவருக்கும் அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் மீண்டும் எச்சரித்துள்ளனர்.

மேலும் கொரோனாவிற்கான விதிமீறலை இரண்டாம் முறை செய்தவர்களுக்கு அபராதம் இரட்டிப்பாகும் என்றும் மூன்றாம் முறை செய்பவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது குறைந்தபட்சம் 100,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அமீரக அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு இணங்கவும், சமூக இடைவெளி வழிகாட்டுதல்களை பின்பற்றவும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை கேட்டுக்கொள்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அபராதப் பட்டியல்

  • ஒரு விருந்து அல்லது கூட்டமாக ஒன்று கூடினால் அதனை ஏற்பாடு செய்தவருக்கு 10,000 திர்ஹம் மற்றும் அதில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் 5,000 திர்ஹம் அபராதம்
  • வாகனங்களில் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தால் 3,000 திர்ஹம் அபராதம்
  • வேலை செய்யும் இடங்கள் அல்லது கடைகள் மற்றும் உணவகங்கள் போன்ற பிற இடங்களில் சமூக இடைவெளியை பராமரிக்க தவறும் தனிநபருக்கு 3,000 திர்ஹம் அபராதம், நிறுவனங்களுக்கு 5,000 திர்ஹம் அபராதம்
  • ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்லாமல் வாகனத்தில் பயணிக்கும் நபர்கள் முக கவசம் அணிய தவறினால் 3000 திர்ஹம்
  • வேலை செய்யும் இடங்கள் மற்றும் அலுவலகங்களில் முக கவசம் அணியாமல் இருந்தால் நிறுவனத்திற்கு 5,000 திர்ஹம் அபராதம் மற்றும் ஊழியருக்கு 500 திர்ஹம் அபராதம்
  • வீட்டு தனிமைப்படுத்தலின் போது கடைபிடிக்கவேண்டிய விதிகளை மீறினால் 50,000 திர்ஹம் அபராதம்
  • கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, அவர்களை கண்காணிக்க உதவும் மொபைல் அப்ளிகேஷனை (smart App for COVID-19 tracing) தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய மறுக்கும் எந்தவொரு நபருக்கும் 10,000 திர்ஹம் அபராதம்
  • கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட கண்காணிப்பு சாதனத்தையோ (tracking device) அல்லது மொபைல் அப்ளிகேஷனையோ சேதப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு 20,000 திர்ஹம் அபராதம்
  • கொரோனா பரிசோதனை செய்ய மறுத்தால் 5,000 திர்ஹம் போன்ற விதிமுறைகள் தற்பொழுதும் அமலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!