கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க உலக நாடுகளிடையே தொற்றுநோய்க்கு எதிரான கூட்டு நடவடிக்கை அவசியம் எனவும், தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தாமதமானால் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு இரு மடங்காக உயரக்கூடும் எனவும் உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. உலகளவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையிலும் நோய்த்தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1 மில்லியனை (10 லட்சம்) நெருங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உலகளவில் 32 மில்லியனுக்கும் (3.2 கோடி) மேலாக உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பாதிப்புகளின் காரணமாக உலகப் பொருளாதாரம் பேரழிவிற்கு உட்பட்டிருப்பதும், முக்கிய கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் சீர்குலைந்திருப்பதும் உலக நாடுகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தற்போதைய இறப்பு விகிதம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த உலக சுகாதார மையத்தின் அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான், “கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 மில்லியன் என்பதே மிகவும் பயங்கரமானது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனை தொடுவதற்கு முன்பே ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்வது குறித்து நாம் சிந்திக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில், ஜப்பானின் புதிய பிரதமர் யோஷிஹைட் சுகா நேற்று வெள்ளிக்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் 2021 ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதற்கு தனது நாடு உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் தொற்றுநோய் குறைந்து வருவதற்கான எந்த அறிகுறிகளையும் உலகம் இதுவரை காணவில்லை என்றாலும் ஜப்பான் நாட்டு பிரதமரின் இந்த அறிவிப்பு உலக சுகாதார மையத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த வருடம் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறும் என ஒலிம்பிக் கமிட்டி மற்றும் ஜப்பான் நாட்டின் சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகளும் முனைப்புடன் செயல்பட்டு வரும் வேளையில், ஆஸ்திரேலியாவின் பிரதமரும் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை உருவாக்கும் எந்தவொரு நாடும், அதனை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.