அமீரக செய்திகள்

உங்களை வித்தியாசமான அனுபவத்திற்கு அழைத்து செல்லும் துபாய் எக்ஸ்போ-2020 பெவிலியன் பார்வையாளர்களுக்காக திறப்பு..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வருடம் எக்ஸ்போ 2020 நடைபெற இருப்பதை முன்னிட்டு அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எக்ஸ்போ 2020 துபாயின் டெர்ரா-சஸ்டைனபிலிட்டி பெவிலியன் (Terra – The Sustainability Pavilion) பகுதியை ஜனவரி 22 முதல் ஏப்ரல் 10 வரை சுற்றுப்பயணம் செய்யலாம் என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான அறிவிப்பு இன்று (சனிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில், அலிஃப் – மொபிலிட்டி பெவிலியன் (Alif – The Mobility Pavilion) மற்றும் மிஷன் பாசிபிள் (Mission Possible – The Opportunity Pavilion), 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெவிலியன்ஸ் பிரீமியர் முன்பதிவுகளை இன்று (ஜனவரி 16) முதல் https://expo2020dubai.com/en/pavilions-premiere என்ற லிங்கில் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் இதற்கான டிக்கெட் விலையாக 25 திர்ஹம்ஸ் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

‘புவிக்கோள்’ என்று பொருள்படும் டெர்ரா (Terra), பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு அனுபவத்தை தரும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நாம் செல்லும் பொழுது காடுகளுக்கிடையில் நடப்பது போன்ற அனுபவத்தைப் பெறலாம்.

இந்த பெவிலியன் புகழ்பெற்ற கிரிம்ஷா கட்டிடக் கலைஞர்களால் (Grimshaw Architects) வடிவமைக்கப்பட்டது மற்றும் நிலையான கட்டிட வடிவமைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைக்கப்பட்டுள்ளது. நீர் மேலாண்மை மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் போன்றவை இங்கே அமைக்கப்பட்டுள்ளது. இது 130 மீட்டர் அகலமுள்ள கூரை வடிவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 1,055 ஒளிமின்னழுத்த பேனல்களைக் கொண்டுள்ளது.

ஒரு சிறந்த அறிவியல் மையமாக இருக்கும் டெர்ரா (Terra) வருங்கால சந்ததியினருக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேம்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக குறிப்பிட்ட செயல்படும் நேரம் மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் போன்ற கட்டுப்பாடுகளுடன் வாரத்திற்கு ஐந்து நாட்கள் செயல்படும் என்றும், பார்வையாளர்கள் இங்கு வருகை புரிய முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

எக்ஸ்போ 2020 துபாய் பணியகத்தின் இயக்குநர் ஜெனரலும், சர்வதேச ஒத்துழைப்புக்கான ஐக்கிய அரபு அமீரக அமைச்சருமான ரீம் அல் ஹாஷிமி கூறுகையில், “இந்த 2021 ம் ஆண்டின் ஒரு நேர்மறையான அனுபவமாக டெர்ராவை ஐக்கிய அரபு அமீரக மக்களுக்காக திறந்துள்ளோம். 2020 ம் ஆண்டு நம்மால் மறக்க முடியாத ஆண்டாக நினைவுகூரப்படலாம் என்றாலும், உலகளாவிய சமுதாயமாக ஒன்றிணைந்து, நமது முக்கியமான சவால்களை தீர்ப்பதற்கான ஒரு மகத்தான வாய்ப்பையும் அளித்துள்ளது,” என்று அவர் கூறினார்.

மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் தெற்காசியா (MEASA) பிராந்தியத்தில் நடைபெறும் முதல் உலக எக்ஸ்போவான எக்ஸ்போ-2020 துபாய் இந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் மார்ச் 31,2022 வரை இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!