அமீரக செய்திகள்

UAE: ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு புதிய பேருந்துகள் சேர்ப்பு..!! அஜ்மானின் பொதுப் போக்குவரத்து ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கை..!!

அஜ்மானின் பொதுப் போக்குவரத்து ஆணையம் (Ajman’s Public Transport Authority – APTA) ஈத் அல்-ஃபித்ர் விடுமுறையின் போது, ​​உள் மற்றும் வெளிப் பாதைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் அழுத்தத்தைக் குறைக்கவும், குடியிருப்பாளர்களிடையே பெருகிவரும் தேவையைப் பூர்த்தி செய்யவும் புதிய ஐந்து பேருந்துகளை பொதுப் போக்குவரத்தில் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.

வசதி:

இது குறித்து APTA இன் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஈத் நாட்களில் பேருந்துகளைப் பயன்படுத்துபவர்களுக்கு வசதியான பயணத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு APTA தனது ஏற்பாடுகளை நிறைவு செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்பதிவிற்கு ஸ்மார்ட் ஆப்:

APTA ஆனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு போக்குவரத்து சேவைகளை அணுகுவதற்கான சேனல்களை வழங்குகிறது. “route” என்ற ஆப் மூலம் பயணிகள் டாக்சிகளைக் கோரலாம். அத்துடன் 600599997 என்ற எண்ணிற்கு அழைத்து APTA உடன் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். பொது போக்குவரத்து, கடல் போக்குவரத்து (Abrah), டாக்சிகள் மற்றும் ஈத் அல்-ஃபித்ர் விடுமுறையின் போது விடப்படும் சிறப்புப் பேருந்து சேவை ஆகியவை இந்த போக்குவரத்து சேவைகளில் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

நேரம்:

ஈத் விடுமுறை நாட்களில் பயணிகளின் அதிக தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நேரங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, உள் பாதைகளுக்கான முதல் பயணங்கள் காலை 6 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை செயல்படும் என்றும், வெளிப்புற சேவைகள் பிற்பகல் 3:15 முதல் நள்ளிரவு வரை இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கப்பல் போக்குவரத்தைப் பொறுத்தவரை, ரஷிதியா, அல்-ஜவ்ரா, அல்-சாஃபியா மற்றும் மெரினா உள்ளிட்ட அனைத்து ஆப்ரா நிலையங்களிலும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை கடல் போக்குவரத்து இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

ஆன் டிமாண்ட் பஸ்:

இந்த சேவையைப் பொறுத்தவரை, ஈத் அல்-ஃபித்ர் விடுமுறை நாட்களில் காலை 6:30 மணி முதல் நள்ளிரவு வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் இதனை ஸ்மார்ட் அப்ளிகேஷன் மூலம் முன்பதிவு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

டிக்கெட் விலை:

அல்-ஜவ்ரா நிலையத்தில் டிக்கெட் விலை 2.50 திர்ஹம் ஆகும், இந்த நிலையத்தைத் தவிர பிற நிலையங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கான ஆப்ரா டிக்கெட்டுகளின் விலை 2 திர்ஹம்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வகையான போக்குவரத்திலும் பயணங்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா பயணம்:

கடல் போக்குவரத்து சுற்றலாப் பயணத்தில் ஒரு நபருக்கு 10 நிமிட பயணத்திற்கு 5 திர்ஹம்களும், நான்கு பேருக்கு 30 நிமிட பயணங்களுக்கு 50 திர்ஹம்களும் வசூலிக்கப்படுகிறது. அதுபோல, ஒரு மணிநேரம் எடுக்கும் பயணங்களுக்கு 100 திர்ஹம் மற்றும் ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கும் சுற்றுலா பயணங்களுக்கு, டிக்கெட்டின் விலை 150 திர்ஹம்களும் ஆகும் என கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!