அமீரக செய்திகள்

BAPS இந்து கோயில், CSI தேவாலயத்திற்கு விதிமுறைகளை நிர்ணயித்த அமீரக அரசு.. மீறினால் 3 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம்…!!

அபுதாபியின் முதல் இந்து கோயிலைப் பார்வையிடுவதற்காக நாள்தோறும் குடியிருப்பாளர்களும் சுற்றுலாப்பயணிகளும் வருகின்ற நிலையில், இந்த கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள புதிய CSI தேவாலயம் நாளை மே 5 ஆம் தேதி பொதுமக்களுக்காக திறக்கப்பட உள்ளது.

அபுதாபியில் அபு முரீகாவில் உள்ள இந்த இரண்டு புனித கட்டிடங்களும் அமீரக ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யன் அவர்களால் வழங்கப்பட்ட 4.37 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளன.

இந்த வழிபாட்டுத் தலங்களைப் பார்வையிட விரும்புவோர், வருகையின் போது பின்பற்ற வேண்டிய நடத்தைகள் பற்றியும், பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த அதிகாரிகளால் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களையும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். அதே போன்று இந்த வழிபாட்டு இடங்களை நிர்வகிப்பவர்களும் பின்பற்ற வேண்டிய சில சட்டங்களை அரசாங்கம் அமைத்துள்ளது.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கான புனித தலங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான 2023 ஆம் ஆண்டின் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டாட்சி சட்டத்தின் (9) கீழ், பின்வரும் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது, மீறலின் தீவிரத்தைப் பொறுத்து 100,000 முதல் 3 மில்லியன் திர்ஹம் வரை அபராதம் மிகப்பெரியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பற்ற வேண்டிய விதிகள்:

>> எந்தவொரு மதம், பிரிவு அல்லது பிற நம்பிக்கைகளின் போதனைகளை அவமதிப்பதற்கும் அனுமதி கிடையாது.

>> பிரார்த்தனைக் கூடம் அல்லது வழிபாட்டு அறையை அதன் நோக்கம் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை

>> நாட்டின் உள் மற்றும் வெளி விவகாரங்களிலும், அரசியல், சட்டங்கள் அல்லது பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் இந்த வளாகங்களுக்குள் தலையிட அனுமதி இல்லை.

>> குழுவாத, இன, மத அல்லது இன மோதலை தூண்டவோ அல்லது தீவிரவாதம் அல்லது வன்முறைக்கு அழைப்பு விடுக்கவோ எந்த வகையிலும் அனுமதி இல்லை.

>> ஒரு மதம், பிரிவினர் அல்லது நம்பிக்கைக்கு அழைப்பு விடும் நோக்கத்துடன் கொண்ட எந்தவொரு செயலையும் நடைமுறைப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

>> பார்வையாளர்கள் இந்த கட்டிடங்களின் வளாகத்திற்குள் மட்டுமே எந்த வழிபாட்டுச் செயல்களையும் செய்ய வேண்டும் மற்றும் இந்த இடங்களுக்கு வெளியே எந்த மத சடங்குகள் அல்லது சடங்குகளை கடைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

>> தனிநபருக்கு அல்லது பிறருக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு சடங்குகளையும்  கடைப்பிடிப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஒரு நபர், பார்வையாளர் அல்லது தொழிலாளியின் உடல்நலம், பாதுகாப்பு அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்த நடைமுறைகளும் கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.

>> மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் அல்லது நிகழ்வுகளை உரிய அதிகாரியின் அனுமதி பெறாமல் ஏற்பாடு செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

>> வெளிப்புற கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்தவோ அல்லது நாட்டிற்கு வெளியே உள்ள அமைப்புகள், சங்கங்கள் அல்லது நிறுவனங்களில் சேருவதற்கு அனுமதி கிடையாது.

>> நிதியை அதற்கான நோக்கங்களைத் தவிர வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது

>> நன்கொடைகளை சேகரிப்பது, அவற்றை சேகரிக்க அனுமதிப்பது அல்லது ஆடியோ, பிரிண்ட், காட்சி, சமூக ஊடகங்கள் அல்லது வேறு எந்த வழிகளிலும் அவற்றை அறிவிப்பது போன்ற நடத்தைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

>> இந்த நிறுவனங்களை நிர்வகிப்பவர்கள், எந்த ஒரு நாட்டின் டிப்ளோமேட்டிக் அல்லது உத்தியோகபூர்வ நிறுவனங்களுடனும் எந்தவொரு அதிகாரபூர்வ அல்லது முறைசாரா உறவுமுறையையும் கொண்டிருக்க அனுமதிக்கப்படுவதில்லை.

>> மற்ற நாடுகளின் உள் அல்லது வெளிநாட்டு அரசியலில் தலையிடவோ அல்லது வழிபாட்டு தலங்களை அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தவோ அனுமதி கிடையாது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!