அமீரக செய்திகள்

UAE: கனமழையால் பெருகிய கொசுக்களை ஒழிக்க அமைச்சகம் தீவிரம்.. புகாரளிக்க தொடர்பு எண்ணும் அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் சமீபத்தில் பெய்த கனமழைக்குப் பிறகு, குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் கொசுக்கள் பெருகி வருகிறது. எனவே நீரில் கொசுக்கள் பெருகுவதைக் கட்டுப்படுத்தவும்  அவற்றை ஒழிக்கவும் அமீரக அரசு தற்பொழுது தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இது தொடர்பாக நாட்டின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MoCCAE) இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், “அமீரக அரசாங்கம் கொசு பெருகும் இடங்களை ஒழிப்பதற்கும், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்துவதற்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக, கொசுக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் அவற்றைக் கட்டுப்படுத்த உயர் தரத்துடன் கூடிய அதிநவீன சர்வதேச தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதாகவும், நீர் குளங்களில் கொசுக்களின் பரவலான இருப்பை கண்டறிந்து அவற்றைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுவதாகவும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமீரகத்தில் நிலவிய மோசமான வானிலையின் காரணமாக நாடு முழுவதும் பெய்த கனமழையினால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது, இது அதிகளவிலான கொசுக்கள் பெருகுவதற்கு வழிவகுத்தது. மேலும் இதன் காரணமாக கொசுக்களால் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயமும் குடியிருப்பு பகுதிகளில் அதிகரித்துள்ளது.

இப்படியான சூழலில், சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் மற்றும் எமிரேட்ஸ் சுகாதார சேவைகள் (EHS) ஆகியவை இணைந்து கொசு எதிர்ப்பு பிரச்சாரத்தின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, மக்களிடையே கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் அவற்றை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.

பொதுமக்களின் ஒத்துழைப்பு:

நாட்டில் கொசுக்களைக் கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் முயற்சிகளை எளிதாக்குவதற்கு, உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து ஒத்துழைக்குமாறு அனைத்து சமூக உறுப்பினர்களையும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அதாவது, கொசுக்கள் அதிகம் காணப்படும் பகுதிகள் அல்லது இனப்பெருக்கம் செய்யும் இடங்களை கண்டால், 8003050 என்ற எண்ணில் MoCCAE அழைப்பு மையத்தைத் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு குடியிருப்பாளர்களை சுற்றுச்சூழல் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக, கட்டுமான தளங்கள், தொழுவங்கள், பள்ளிகள், பண்ணைகள், தோட்டங்கள், பூங்காக்கள், குடியிருப்பு பகுதிகள், பந்தய தடங்கள் மற்றும் நீர் தேங்கியுள்ள ஈரமான பகுதிகள் போன்ற இடங்கள் அனைத்தும் விசாரணை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உட்பட்டவை என்பதையும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

அத்துடன் நீர்ப்பாசனப் படுகைகள், நீச்சல் குளங்கள் மற்றும் நீரூற்றுகளில் தேங்கி நிற்கும் நீரை அகற்றுவதன் மூலமாகவும், அவற்றை உலர்த்துதல், மூடி அல்லது தொடர்ந்து வெளியேற்றுவதன் மூலமாகவும் கொசுக்கள் பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் பொதுமக்கள் உதவலாம் என்றும் MoCCAE தெரிவித்துள்ளது.

மனிதர்களுக்கு பாதிப்பு இல்லை:

கொசுக்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் கொசுக்களை மட்டுமே குறிவைக்கின்றன, மேலும் அவை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்காது எனவும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முனிசிபல் விவகாரத் துறையின் இயக்குனர் Eng. ஒதைபா சயீத் அல் கைதி (Eng. Othaibah Saeed Al Qaydi) உறுதியளித்துள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, கொசுக்களின் முதன்மை இனப்பெருக்கம் செய்யும் நீர் கசிவை சரிசெய்வதன் முக்கியத்துவத்தையும், மழைநீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் தூய்மையை பராமரிப்பதையும் குடியிருப்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அமைச்சகம் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!