அமீரக செய்திகள்

துபாய் மெட்ரோல பயணிக்கும் நபரா நீங்க..?? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), பயணிகளின் புகார்களுக்கு பதிலளிக்கும் விதமாக மெட்ரோவில் பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிகளை சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது. முதலாவதாக, மெட்ரோவில் சக பயணி ஒருவர் இயர்போன்களைப் பயன்படுத்தாமல் சத்தமாக இசையைக் கேட்பதாகவும் இது போன்ற நடத்தையை நிறுத்த ஒரு விதியை உருவாக்குமாறும் டிவிட்டரில் ஒருவர் RTA-விடம் அளித்துள்ள கோரிக்கைக்கு, மெட்ரோவில் இதுபோன்ற இடையூறுகளை ஏற்படுத்தும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதை உறுதிசெய்து ஆணையம் அவருக்கு பதிலளித்துள்ளது.

அதன்படி, பொதுச் சேவைகள் மற்றும் போக்குவரத்துகளில் பயணிகள் விதிமீறல் செய்தால் அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் குறித்த முழுப் பட்டியலையும் RTA அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அபராதத் தொகையானது குற்றங்களைப் பொறுத்து 100 திர்ஹம் முதல் 2000 திர்ஹம் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது போன்று மெட்ரோவில் RTA வெளியிட்டுள்ள விதிமீறல்களும் அவற்றுக்கான அபராதத் தொகையும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

1. பொதுப் போக்குவரத்து சேவைகள் மற்றும் தொடர்புடைய போக்குவரத்து வாகனங்களை சரியான கட்டணத்தைச் செலுத்தாமல் பயன்படுத்துதல் அல்லது போக்குவரத்து கட்டண மண்டலப் பகுதிகளுக்குள் கட்டணம் செலுத்தாமல் நுழைதல்/வெளியேறுதல் – 200 திர்ஹம்

2. பொதுப் போக்குவரத்து இடங்கள், வாகனங்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடிய அல்லது அவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள் அல்லது உபகரணங்களை எடுத்துச் செல்லுதல் அல்லது பயன்படுத்துதல் – 100 திர்ஹம்

3. பொதுப் போக்குவரத்து, பொது வாகனங்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் இடையூறு அல்லது சிரமத்தை உண்டாக்குதல் – 100 திர்ஹம்

4. பொது போக்குவரத்து பகுதிகள், பொது போக்குவரத்திற்கான வாகனங்கள் உள்ளே பயணிகளுக்கென்று இல்லாத இடங்களில் நிற்பது அல்லது உட்காருதல் – 100 திர்ஹம்

5. போக்குவரத்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்களுக்கு இடையே நகரும் போது கதவுகளைத் திறப்பது அல்லது பொதுப் போக்குவரத்தை அணுக அல்லது வெளியேற முயற்சிப்பது – 100 திர்ஹம்

6. பொது போக்குவரத்து வாகனங்களுக்குள்  எந்த விதத்திலும் பொருட்களை விற்பனை செய்தல் அல்லது விளம்பரப்படுத்துதல் – 200 திர்ஹம்

7. இன்ஸ்பெக்டர்கள் அல்லது ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கத் தவறுதல் அல்லது அவர்களின் கடமைகளைச் செய்வதைத் தடுப்பது – 200 திர்ஹம்

8. பொதுப் போக்குவரத்து பகுதிகள், பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சேவைகளை ஆணையத்தின் அறிவுறுத்தல்களுக்கு முரணாகப் பயன்படுத்துதல் – 200 திர்ஹம்

9. பார்வையற்றவர்களுடன் வரும் வழிகாட்டி நாய்களைத் தவிர, பொது போக்குவரத்து, பொது வாகனங்கள் மற்றும் சேவைகளுக்கு விலங்குகளை கொண்டு வருதல் – 100 திர்ஹம்

10. பொது போக்குவரத்து, பொது போக்குவரத்து மற்றும் சேவைகளின் தூய்மையை கெடுக்கும் எந்தவொரு செயலையும் (துப்புதல், குப்பை கொட்டுதல்) செய்தல் – 200 திர்ஹம்

11. பொதுப் போக்குவரத்துகளில் பயணிக்கும் போது இருக்கைகளில் கால்களை வைத்தல் – 100 திர்ஹம்

12. கோரிக்கையின் பேரில் நோல் கார்டை வழங்கத் தவறினால் – 200 திர்ஹம்

13. பிறருக்கு வழங்கப்பட்டுள்ள கார்டைப் பயன்படுத்தி பயணம் செய்தல் – 200 திர்ஹம்

14. காலாவதியான கார்டைப் பயன்படுத்துதல் – 200 திர்ஹம்

15. தவறான கார்டைப் பயன்படுத்துதல் – 200 திர்ஹம்

16. நோல் கார்டுகளை அதிகாரியின் முன் அனுமதியின்றி விற்பனை செய்தல் – 200 திர்ஹம்

17. போலியான கார்டைப் பயன்படுத்துதல் – 500 திர்ஹம்

18. குறிப்பிட்ட பிரிவினருக்காக நியமிக்கப்பட்ட பகுதிகளில் உட்காருதல் அல்லது அணுகுதல் – 100 திர்ஹம்

19. தடை செய்யப்பட்ட பகுதிகளில் சாப்பிடுவது மற்றும் குடிப்பது – 100 திர்ஹம்

20. பயணிகள் தங்குமிடங்களில் தூங்குவது அல்லது தடை செய்யப்பட்ட பகுதிகளில் தூங்குவது – 300 திர்ஹம்

21. பொதுப் போக்குவரத்து வாகனங்களில் உள்ள இருக்கைகள் உட்பட பொதுப் போக்குவரத்திற்கு உட்பட்ட பொருள்களைச் சேதப்படுத்துதல் அல்லது அழித்தல் – 2,000 திர்ஹம்

22. மெட்ரோ பயனர்களுக்காக நியமிக்கப்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவைத் தாண்டி வாகனங்களை நிறுத்துதல் – ஒரு நாளைக்கு 100 முதல் 1,000 திர்ஹம் வரை

23. பொதுப் போக்குவரத்து தடை செய்த பகுதிகளுக்குள் நுழைவது, எச்சரிக்கை பலகைகளை மீறி செயல்படுதல் – 100 திர்ஹம்

24. பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சேவைகளுக்குள் புகை பிடித்தல் – 200 திர்ஹம்

25. லிஃப்ட் அல்லது எஸ்கலேட்டர்களை தவறாகப் பயன்படுத்துதல் – 100 திர்ஹம்

26. பொது போக்குவரத்து இடங்கள், வாகனங்கள் மற்றும் சேவைகளில் தாவிக் குதித்து ஏறுதல் – 100 திர்ஹம்

27. வாகனம் ஓட்டும் போது, ​​பொதுப் போக்குவரத்தின் ஓட்டுநருக்கு ஏதேனும் கவனச்சிதறல் அல்லது இடையூறு ஏற்படுத்துதல் – 200 திர்ஹம்

28. பொது போக்குவரத்து இடங்கள் மற்றும் சேவைகளுக்குள் மதுபானங்களை எடுத்துச் செல்வது: 500 திர்ஹம்

29. பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சேவைகளுக்குள் ஆயுதங்கள், கூர்மையான கருவிகள் அல்லது எரியக்கூடிய பொருட்கள் உட்பட அபாயகரமான பொருட்களை எடுத்துச் செல்வது – 1,000 திர்ஹம்

30. தேவையில்லாத போது அவசரகால வெளியேற்றங்கள் உட்பட ஏதேனும் பாதுகாப்பு கருவியைப் பயன்படுத்துதல் – 2,000 திர்ஹம்

31. அவசரகால பொத்தான்களை தவறாக பயன்படுத்துதல் – 2,000 திர்ஹம்

பட்டியலை வெளியிட்டதுடன், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து, மெட்ரோவை இன்ஸ்பெக்டர்கள் தொடர்ந்து சோதனை செய்வதாகவும் RTA தெரிவித்ததுள்ளது.

மேலும், பொதுப் போக்குவரத்துகளில் பயணிகள் ஏதேனும் இடையூறுகளையோ அல்லது சிரமத்தையோ அனுபவித்தால் மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்களிடம் தெரிவிக்குமாறும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!