அமீரக செய்திகள்

UAE: பல்வேறு நாட்டு ஏழை மக்களுக்கு உணவளிக்கும் ‘One Billion Meals’ திட்டத்தை அறிவித்த பிரதமர்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களால் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட ‘10 million meals’ பிரச்சாரமானது ‘100 million meals’ என அதிகரிக்கப்பட்டு கடந்த வருடம் ‘One Billion Meals’ என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதே போல் இந்த வருடமும் துபாய் பிரதமர் ‘One Billion Meals’ பிரச்சாரத்தை அறிவித்துள்ளார். இதன் மூலம் சுமார் 50 நாடுகளில் உள்ள ஏழை, எளிய சமூகங்களுக்கு உணவு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஷேக் முகமது ட்விட்டரில் “உலகில் ஒவ்வொரு பத்து பேரில் ஒருவர் பசியால் வாடுகின்றனர். எனவே, அவர்களின் பசியாற்ற பல தசாப்தங்களுக்கு நிலையான முறையில் மில்லியன் கணக்கில் உணவை வழங்குவதே இந்த முயற்சியின் குறிக்கோள்” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் ட்வீட் செய்த வீடியோவில் அரபு மொழியில் பேசிய ஷேக் முகம்மது “சகோதர சகோதரிகளே, புனித மாதத்தின் தொடக்கத்தில் எங்கள் வருடாந்திர பாரம்பரியத்தின்படி, ரமலான் திருநாளில் ‘ஒரு பில்லியன் உணவு’ என்ற நன்கொடை திட்டத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த திட்டத்தின் மூலம் பிறரது பசியாற்ற பல தசாப்தங்களாக ஒரு பில்லியன் உணவுகளை நிலையான வழியில் வழங்குவதே குறிக்கோள் என்றும், கடவுள் விருப்பத்தினால் ஐக்கிய அரபு அமீரகம் மக்களுக்கு தொடர்ந்து தொண்டு மற்றும் தடையற்ற நன்மையை உறுதிசெய்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, ஜோர்டான், இந்தியா, பாகிஸ்தான், லெபனான், கிர்கிஸ்தான், அங்கோலா மற்றும் உகாண்டா உள்ளிட்ட 13 நாடுகளில் உள்ள தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இந்த நன்கொடை பிரச்சாரம் தேவையான உதவிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஒன் பில்லியன் மீல்ஸ் பிரச்சாரம், உலகெங்கிலும் உள்ள பின்தங்கிய சமூகங்களுக்கு நிலையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான உலகளாவிய தேவைக்கு பதிலளிப்பதுடன், 2030 ஆம் ஆண்டிற்குள் பசியை முடிவுக்குக் கொண்டுவரும் ஐ.நா சபையின் நிலையான வளர்ச்சி இலக்கு 2 ஐ அடைவதற்கான முயற்சிகளை ஆதரிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்முயற்சி நடவடிக்கைகள்:

2020 இல் 10 மில்லியன் உணவுகள் – அமீரகத்தில் இருந்து 1,000 தன்னார்வலர்கள் பங்கேற்ற வேளையில், 115 நாடுகளுக்கு மேல் இருந்து நன்கொடைகள் வந்துள்ளன. சுமார் 15.3 மில்லியன் உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.

2021 இல் 100 மில்லியன் உணவுகள் – சுமார் 220 மில்லியன் உணவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சுமார் 51 நாடுகளைச் சேர்ந்த 385,000 தனிநபர்கள், நிறுவனங்கள், வணிகர்களிடமிருந்து நன்கொடைகள் பெறப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டில் 1 பில்லியன் உணவுகள் – தொடங்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் இலக்கை எட்டியதாகக் கூறப்பட்டுள்ளது. நைஜீரியா, சூடான், அல்பேனியா, ஜோர்டான், எகிப்து, கிர்கிஸ்தான், லெபனான், இந்தியா, பாகிஸ்தான், லெபனான், கிர்கிஸ்தான், அங்கோலா, உகாண்டா, கொசோவோ, தஜிகிஸ்தான் உட்பட 50 நாடுகளில் தேவைப்படுபவர்களுக்கு உணவைப் பாதுகாத்து உதவி வழங்கப்பட்டுள்ளது.

உலகளாவிய கணக்கெடுப்பின்படி 2021 ஆம் ஆண்டில் 828 மில்லியன் மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 9.8 சதவீதத்திற்கு சமமாகும். அதாவது, 10 பேரில் ஒருவருக்கு சாப்பிட போதுமான உணவு இல்லை. ஐந்து வயதுக்குட்பட்ட 45 மில்லியன் குழந்தைகள் மிகவும் ஆபத்தான ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றினால் பாதிக்கப்படுவதால் இது குழந்தை இறப்பு அபாயத்தை பன்னிரெண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஐந்து வயதுக்குட்பட்ட 149 மில்லியன் குழந்தைகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் வளர்ச்சி மற்றும் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளனர் எனவும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!