கொரோனா வைரஸில் மாறுபாட்டை கொண்ட மற்றுமொரு புதிய வைரஸ் (மூன்றாவது) கண்டுபிடிப்பு..!! இருவர் பாதிப்பு..!!

உலகெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸின் பாதிப்புகளே இன்னும் முழுவதுமாக ஓயாத நிலையில் அதிலிருந்து மாறுபட்ட சற்று தீவிரமாக பரவக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸை கண்டுபிடித்திருப்பதாகவும் அதன் பாதிப்புகள் பிரிட்டன் நாட்டில் அதிகளவில் பரவியிருப்பதாகவும் பிரிட்டன் அரசு சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து இந்தியா உட்பட உலகின் பல நாடுகளும் பிரிட்டன் நாட்டிற்கு செல்லும் அனைத்து விமான சேவைகளையும் தற்காலிகமாக தடை செய்துள்ளது. இதிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, குவைத் மற்றும் ஓமான் அனைத்து நாடுகளுக்கும் இடையேயான விமான போக்குவரத்தை தடை செய்தததுடன் அந்த நாடுகளின் எல்லைகளையும் ஒரு வாரத்திற்கு மூடியுள்ளது.

இந்த புதிய வகை கொரோனா வைரஸின் (இரண்டாவதாக கண்டறியப்பட்ட வைரஸ்) தீவிரத்தன்மை மற்றும் பாதிப்புகள் குறித்த முழுமையான விபரங்களே இன்னும் முழுமையாக வெளிவராதிருக்கும் நிலையில் தற்போது அந்த இரு கொரோனா வைரஸின் மாறுபாடுகளை விட்டும் மேலும் ஒரு புதுமையான மாறுபாட்டை கொண்டிருக்கும் மற்றொரு கொரோனா வைரஸ் (மூன்றாவதாக கண்டறியப்பட்டுள்ள வைரஸ்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாட் ஹான்காக் “ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள (சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மற்றும் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ்) கொரோனா வைரஸின் வடிவம் அல்லாத மற்றொரு புதிய மாறுபாட்டை கொண்ட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு நபர்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்த இருவரும் கடந்த சில வாரங்களாக தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணம் செய்த கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்புடையவர்கள் ” என்று இங்கிலாந்தில் இன்று நடந்த ஒரு ஒரு ஊடக சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “இந்த புதிய மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் மிகவும் பரவலாக உள்ளது, ஏனெனில் இது இன்னும் பரவக்கூடியது, மேலும் இது இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் புதிய மாறுபாட்டை கொண்ட வைரஸை விடவும் மேலும் மாற்றம் கொண்டிருப்பதாக தெரிகிறது” என்று ஹான்காக் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.