இந்தோனேசியாவில் இருந்து பயணிகளை ஏற்றிச்சென்ற விமானம் திடீரென மாயம்..!! தேடும் பணி தீவிரம்..!!

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து இன்று போயிங் ரக விமானம் ஒன்று போண்டியாக் நகரை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தது. தனது பயணம் துவங்கிய சில நிமிடங்களிலேயே அந்த விமானம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது. தற்பொழுது வரை விமானத்தை பற்றிய தகவல் கிடைக்காததால் அந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருக்குமோ என அஞ்சப்படுகிறது. விமானக் கண்காணிப்பு தரவுகளின் படி, விமான புறப்பட்ட நான்கு நிமிடங்களுக்குப் பிறகு விமானம் செங்குத்தாக பயணித்திருப்பதாக கணித்துள்ளபடியால், விமானம் கடலில் மூழ்கி இருக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஜகார்த்தாவின் சோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை பிற்பகல், ​​சுமார் 130 பேரை ஏற்றிச்செல்லும் திறன் கொண்ட போயிங் 737-500 விமானத்தில் எத்தனை பயணிகள் மற்றும் பணியாளர்கள் பயணித்தனர் என்பது பற்றிய தெளிவான விபரங்கள் இன்னும் அறியப்படவில்லை.

இந்த திசையில் பயணிக்கும் விமானம் ஜாவா தீவுக்கும் இந்தோனேசியாவின் போர்னியோ தீவின் பிரிவான கலிமந்தனுக்கும் (Kalimantan) இடையில் ஜாவா கடலில் 90 நிமிடங்கள் வழக்கமாக பயணிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது மாயமாகியுள்ள விமானம், கிட்டத்தட்ட 11,000 அடி (3,350 மீட்டர்) உயரத்தை எட்டியதாக ஃபிளைட் ராடார்-24 இன் தரவு தெரிவிக்கிறது. அதன் பின்னர் இந்த விமானமானது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்துள்ளது. இந்த விமானம் கடைசியாக பிற்பகல் 2:40 மணிக்கு (0740 GMT) கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விமான கண்காணிப்பு நிறுவனம் Sriwijaya விமானம் (SJ182) ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட சுமார் 4 நிமிடங்களுக்குப் பிறகு, 10,000 அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜகார்த்தா தீவின் வடக்கு பகுதியில் உள்ள கடலின் அருகே விமான பாகங்கள் கிடைத்ததாக மீனவர் அளித்த தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று அது மாயமான விமானத்தின் பாகங்கள் தானா என்று விசாரணை நடத்தப்பட்டது வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.