அமீரக செய்திகள்

துபாயில் கட்டப்பட்டு வரும் புதிய இந்து கோயில்..!! அடுத்த வருடம் திறக்கப்படவுள்ள கோயிலின் புகைப்படங்கள் உள்ளே..!!

மதச்சார்பற்ற நாடாக திகழ்ந்து வரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபியில் இந்துக்களுக்காக கோயில் கட்டப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், துபாயில் இந்துக்களுக்கென்று புதிதாக இந்து கோயில் ஒன்று அடுத்த வருடம் திறக்கப்பட இருப்பதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் இருக்கக்கூடிய ஜெபல் அலி பகுதியில் புதிதாக கோயில் கட்டப்பட்டு வருவதாகவும் இந்த கோயிலானது வரும் 2022 ம் ஆண்டு தீபாவளி சமயத்தில் வழிபாட்டாளர்களுக்காக திறக்கப்படும் என்றும் தற்பொழுது கூறப்பட்டுள்ளது.

இந்திய தொழிலதிபரும் சிந்தி குரு தர்பார் கோயிலின் அறங்காவலர்களில் ஒருவருமான ராஜு ஷிராஃப் ஞாயிற்றுக்கிழமை கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், கட்டமைப்பின் அடித்தளம் நிறைவடைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

புதிய கோயிலானது பர்துபாயின் சூக் பனியாஸில் உள்ள சிந்தி குரு தர்பார் கோயிலின் விரிவாக்கமாகும். நாட்டின் பழமையான இந்து கோவில்களில் ஒன்றான இது கடந்த 1950-களில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் கூறுகையில், முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கான குவித்தல், ஷோரிங் மற்றும் வார்ப்பு செய்தல் (Piling, shoring and casting) தற்பொழுது முடிந்தது என்றும், 2022 ம் ஆண்டு தீபாவளியின் போது இந்த கோயிலை திறக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இந்த கோயிலுக்கான அஸ்திவாரம் போடும் பணி கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்தது.

இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த இந்து சமூகங்களின் மத நம்பிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த கோயில் 11 இந்து தெய்வங்களைக் கொண்டிருக்கும் என்றும். மேலும், கோயிலின் கட்டிடக்கலை ஒரு தனித்துவமான அரேபிய தோற்றத்தைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜு ஷிராஃப் கூறுகையில், “வழிபாட்டாளர்கள் 4,000 சதுர அடி பரப்பளவு கொண்ட மண்டபத்தை கலாச்சார நிகழ்வுகள், மதக் கூட்டங்கள் மற்றும் சமூக ஒன்றுகூடுதல்களுக்குப் பயன்படுத்தலாம். நடனம், இசை மற்றும் கலை வகுப்புகளுக்கு மற்றொரு சிறிய பகுதி ஒதுக்கப்படும். வார இறுதி நாட்களில் மட்டுமல்லாமல், மக்கள் தினசரி அடிப்படையில் இதைப் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!