அமீரக செய்திகள்

UAE: ‘சர்ச் ஆஃப் சவுத் இந்தியா’ தேவாலய கட்டிட பணிக்கு லுலு குழும தலைவர் யூசுப் அலி ஒரு கோடி ரூபாய் நன்கொடை..!!

அபுதாபியில் கட்டப்பட்டு வரும் புதிய தேவாலயமான சர்ச் ஆஃப் சவுத் இந்தியா – பாரிஷுக்கு (Church of South India – Parish) அமீரகத்தில் தொழில் புரிந்து வரும் லுலு குழுமத்தின் தலைவர் யூசுப் அலி எம்.ஏ. நன்கொடையாக 5 லட்சம் திர்ஹம்ஸ் (இந்திய மதிப்பில் ஒரு கோடி ருபாய்) கொடுத்து உதவியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பாரம்பரிய இந்து கோயில் கட்டப்பட்டு வரும் அதே பகுதியில் 15,000 சதுர அடி பரப்பளவில் இந்த புதிய தென்னிந்திய தேவாலயம் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சி.எஸ்.ஐ. பாரிஸ் சர்ச்சின் விகாரர் ரெவ். லால்ஜி எம் பிலிப்பிடம் யூசுப் அலி காசோலையை வழங்கியுள்ளார். இதன் பிறகு பேசிய லால்ஜி எம் பிலிப், உலகின் மிக அமைதியான மற்றும் சகிப்புத்தன்மையுள்ள நாடுகளில் ஒன்றாக ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்குவதில் அமீரக தலைவர்கள் ஆற்றும் பங்களிப்பை பாராட்டியுள்ளார்.

மேலும் “எங்கள் எல்லா முயற்சிகளுக்கும் எப்போதும் சிறந்த ஆதரவாளராக இருந்த யூசுப் அலியின் தாராளமான நன்கொடைக்கும் நன்றி” என்றும் சி.எஸ்.ஐ. பாரிஸ் தேவாலயத்தின் தந்தை லால்ஜி எம் பிலிப் கூறியுள்ளார்.

இது குறித்து லுலு குழுமத்தின் தலைவர் யூசுப் அலி கூறுகையில், “200 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளின் தேசிய இனங்கள் மற்றும் மதங்களின் தாயகமாக விளங்கும் ஐக்கிய அரபு அமீரகம், மறைந்த அமீரகத்தின் ஸ்தாபகத் தந்தை ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் தொலைநோக்கு பார்வையை உண்மை படுத்தும் விதமாக இனவாத நல்லிணக்கத்திற்கும், அமைதியான சகவாழ்வுக்கும் ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டாக இன்றைய தலைமையின் கீழ் திகழ்கிறது. இந்த மாபெரும் முயற்சியின் ஒரு பகுதியாக எனது பங்களிப்பும் இருப்பதில் பெருமை அடைகிறேன்” என்றும் கூறியுள்ளார்.

அமீரகத்தின் சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் அவர்களால் கடந்த ஆண்டு நவம்பரில் சர்ச் ஆஃப் சவுத் இந்தியா கட்டிடத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

சுமார் 750 வழிபாட்டாளர்கள் பங்கேற்கும் வகையில் கட்டப்பட்டு வரும் இந்தபுதிய தேவாலயத்தின் கட்டிட பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதியில் வழிபாட்டாளர்களுக்காக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!