அமீரக செய்திகள்

UAE: அதிக எடையை குறைப்பவர்களுக்கு 50,000 திர்ஹம் பரிசுத் தொகை அறிவிப்பு! நாளை முதல் எட்டு வார சவால் தொடக்கம்…

ஐக்கிய அரபு அமீரகத்தின் உடல் பருமன் குறித்த விழுப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட “Weight Loss Challenge” போட்டியானது இந்த ஆண்டும் நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த போட்டியின் மூன்றாவது பதிப்பு RAK மருத்துவமனையில் தொடங்க உள்ளது. இந்த சவாலில் பங்கேற்று அதிகபட்சமாக எடையை குறைப்பவர்களுக்கு 50,000 திர்ஹம் மதிப்புள்ள ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியின்படி, பிரபல RAK மருத்துவமனை, சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகத்துடன் இணைந்து போட்டியை நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுநேரடி, மெய்நிகர் மற்றும் கார்ப்பரேட் என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் படி, நேரடியாக பங்கேற்கும் பிரிவில் எடைக்குறைப்பு செய்து முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறுபவர்கள் தாங்கள் குறைக்கும் ஒவ்வொரு கிலோவிற்கும் முறையே Dh300, Dh200 மற்றும் Dh100 வழங்கப்படும் என்பது தெரியவந்துள்ளது. இந்த எட்டு வார சவாலானது ஜனவரி 20 அன்று தொடங்கி மார்ச் 22 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, உலக சுகாதார நிறுவனம் (WHO) உடல் பருமனை ஒரு நோயாக அறவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், அசாதாரண இரத்த கொழுப்பு அளவுகள் மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சில ஆபத்தான புற்றுநோய்களுக்கு காரணியாக இது அமையும் என்றும் எச்சரித்துள்ளது.

இது குறித்து RAK மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராசா சித்திக் அவர்கள் கூறுகையில்,கடந்த ஆண்டு நடைபெற்ற “weight loss challenge”-ல் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று இந்த போட்டியை மிகப்பெரிய வெற்றியடைய செய்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டில் கிடைத்த வெற்றி இந்த ஆண்டு பலரையும் இந்த போட்டியில் பங்கேற்க ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார்.

அதுபோல, RAK மருத்துவமனையின் தலைமை ஆரோக்கிய அதிகாரி பேராசிரியர் அட்ரியன் கென்னடி அவர்கள் பேசுகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் உடல் பருமனாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, இது போன்ற முன்முயற்சிகள் மக்கள் பலரையும் எடைக்குறைப்பு செய்ய ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நிபந்தனையின்படி, நேரடியாகப் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஜனவரி 20 முதல் 22 வரை RAK மருத்துவமனையில் அவர்களது எடையைப் பதிவு செய்ய வேண்டும் என்றும், மெய்நிகர் வகையின் மூலம் பங்கேற்பவர்கள் தங்கள் உள்ளூர் கிளினிக்கில் எடைபோட்டு, அங்கீகரிக்கப்பட்ட பதிவுச் சீட்டை சவாலுக்கான இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!