அமீரக செய்திகள்

UAE: கொரோனா விதிமீறலுக்காக வழங்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து அப்பீல் செய்ய குடியிருப்பாளர்களுக்கு ஓர் வாய்ப்பு..!! பொதுவழக்கு ஆணைய உயரதிகாரி தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கோவிட் பாதுகாப்பு விதிகளையும் அமீரக அரசு அறிவித்து அதனை மீறிய குடியிருப்பாளர்களுக்கு 500 திர்ஹம்ஸ் முதல் 50,000 திர்ஹம்ஸ் வரையிலும் அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், விதிமீறலுக்காக அபராதம் பெறப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்களுக்கு நியாயமற்ற முறையில் அபராதம் விதிக்கப்பட்டதாக உணர்ந்தால் அதனை எதிர்த்து அப்பீல் செய்யும் வசதியும் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியின் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அபராதத்தை சவால் செய்ய விரும்பும் குடியிருப்பாளர்களுக்காகவே ஒரு புதிய மின்னணு சேவை ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு சேவையை www.pp.gov.ae என்ற இணையதளம் வழியாக அணுகலாம். மேலும் இதை பொது வழக்கு அப்ளிகேஷன் வழியாகவும் அணுகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மின்னணு சேவை வழியாக எந்தவொரு கோவிட் -19 அபராதத்திற்கும் எதிராக ஒருவர் தனது புகாரை தங்களின் தனிப்பட்ட தகவல்கள், அபராதம் வழங்கப்பட்ட செயலுக்கான விவரங்கள் மற்றும் அபராதத்தை சவால் செய்வதற்கான காரணங்கள் உள்ளிட்ட தகவல்களை வழங்குவதன் மூலம் அப்பீல் செய்யலாம்.

இது குறித்து அமீரகத்தின் அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் வழக்கு விசாரணையின் தலைமை வழக்கறிஞர் சலீம் அலி அல் ஜாபி தெரிவிக்கையில், கோவிட் -19 அபராதம் குறித்த எந்தவொரு புகாரையும் விசாரிக்க அதிகாரசபையில் 12 துணைக் குழுக்கள் மற்றும் நாடு முழுவதும் 60 க்கும் மேற்பட்ட பொது வக்கீல்கள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் “உண்மையில், நாங்கள் அபராதம் விதிக்கும் நிறுவனம் அல்ல. தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் அபராதத்தில் விலக்கு வேண்டி விண்ணப்பிக்கும் புகார்களை நாங்கள் ஆராய்வோம். சம்பந்தப்பட்ட ஒவ்வொரு புகாரையும் விசாரித்து அபராதத்தை ரத்து செய்யலாமா அல்லது அதை ஆதரிக்க வேண்டுமா என்று தீர்மானிப்பது அரசு தரப்பினரின் கடமையாகும்” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த புதிய மின்னணு வசதி குறித்த மேலதிக தகவல்களுக்கு 80099999 என்ற ஹாட்லைன் வழியாகவும் பொதுவழக்கு விசாரணை ஆணையத்தை தொடர்புகொள்ளலாம் என்றும் அல் ஜாபி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!