அமீரக செய்திகள்

துபாயில் கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதிகளின் பிள்ளைகளுக்கு 10 ஆண்டு கோல்டன் விசா வழங்கி கல்வி செலவையும் ஏற்ற துபாய்..!!

துபாயில் கடந்த ஜூன் மாதத்தில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவரால் தங்கள் வீட்டினுள் வைத்தே கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதிகளின் இரண்டு மகள்கள் மற்றும் அவர்களின் தாத்தா பாட்டி ஒவ்வொருவருக்கும் அமீரகத்தில் தங்குவதற்கான 10 ஆண்டு கோல்டன் விசாவினை துபாய் அரசு வழங்கியுள்ளது. மேலும் அந்த சிறுமிகளின் தங்குமிடம் மற்றும் கல்வியையும் அரசே ஏற்றிருப்பதாகவும் வதிவிட மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்கள் மற்றும் துபாய் காவல்துறை பொது இயக்குநரகம் திங்களன்று தெரிவித்துள்ளது.

துபாயில் இருக்கும் அரேபியன் ரேன்சஸ் பகுதியில் உள்ள தங்கள் வில்லாவில் தங்கியிருந்த 48 வயதுடைய ஹிரென் மற்றும் 40 வயதுடைய விதி அதியா ஆகியோர் ஜூன் 17 ஆம் தேதி அன்று, 24 வயதான பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தொழிலாளி ஒருவனால் படுகொலை செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்கு பிறகு ஷார்ஜாவில் பதுங்கியிருந்த கொலையாளியை துபாய் போலீசார் கைது செய்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த வீட்டிற்கு திருட சென்றதையும், இந்திய தம்பதிகள் இருவரையும் கொலை செய்ததையும் அவன் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து கொலையாளிக்கு தண்டனை வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்திற்கு பிறகு கொலை செய்யப்பட்ட தம்பதிகளின் இரு மகள்களும் இந்தியா சென்று அவர்களின் தாத்தா மற்றும் பாட்டியுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் மீண்டும் துபாய் திருப்பி அழைத்துவர அவ்விரு சகோதரிகளுடனும், தாத்தா மற்றும் பாட்டியுடனும் தொடர்பு கொண்டதாக துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது துபாய் திரும்பி வந்துள்ள இரு சிறுமிகள் மற்றும் அவர்களின் தாத்தா மற்றும் பாட்டிக்கு துபாய் காவல்துறையின் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் அப்துல்லா அல் மர்ரி மற்றும் GDRFA இன் டைரக்டர் ஜெனரல் மேஜ் ஜெனரல் முகமது அல் மர்ரி ஆகியோர் இன்று (திங்கள்கிழமை) 10 ஆண்டிற்கான கோல்டன் விசாவினை வழங்கியுள்ளனர்.

இது குறித்து லெப்டினென்ட் ஜெனரல் அல் மர்ரி கூறுகையில், கொலை செய்யப்பட்ட தம்பதிகளின் மகள்களை மீண்டும் அமீரகத்திற்கு அழைத்து வருவது, மற்றும் அவர்களின் கல்வியை அமீரகத்தில் தொடர வேண்டும் என்பது அவர்களின் பெற்றோரின் விருப்பம் என கூறியுள்ளார். மேலும் கோவிட் -19 காரணமாக விமானங்கள் குறைவாக இருக்கும்போது அவர்கள் பயணிக்க சிறப்பு பயண அனுமதி வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மீண்டும் துபாய் திரும்பியிருக்கும் அவ்விரு சிறுமிகளுக்கும் துபாயில் உள்ள ரெப்டன் பள்ளி துபாய் (Repton School Dubai) மற்றும் கனேடிய பல்கலைக்கழகம் துபாய் (Canadian University Dubai) ஆகியவை அவர்களின் கல்வியை அமீரகத்தில் தொடர முழு உதவித்தொகை வழங்கியுள்ளது.

துபாயில் உள்ள கனேடிய பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர் கரீம் செல்லி கூறுகையில், பொறியியல் கல்லூரியில் மூத்த சகோதரிக்கு நான்கு ஆண்டு உதவித்தொகை வழங்குவதன் மூலம் அவர்களின் குடும்பத்தை ஆதரிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். மேலும் அவரது நான்கு ஆண்டு கல்வி செலவான 300,000 திர்ஹம்ஸை பல்கலைக்கழகம் ஈடுசெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று துபாயில் உள்ள ரெப்டன் பள்ளியின் முதல்வர் டேவிட் குக், இரண்டாவது சிறுமியின் மீதமுள்ள கல்விக் கட்டணத்தைய நிர்வாகம் முழுமையாக ஏற்கும் என்றார். அவர் மேலும் கூறுகையில் “அந்த சிறுமி ரெப்டன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள், இந்த சூழ்நிலையில் அந்த பெண்ணுடன் நின்று அவளுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவது நமது மனிதாபிமான பொறுப்பின் ஒரு பகுதியாகும்” என்று டேவிட் குக் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!