அமீரக செய்திகள்

அபுதாபி: ஷேக் சையத் மசூதிக்கு செல்ல வழிபாட்டாளர்களுக்கு இலவச பேருந்து சேவை..!!

புனித ரமலான் மாதத்தின் இறுதி நாட்களை நெருங்கியுள்ள நிலையில் சிறப்பு தொழுகைகள் மசூதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் அபுதாபியை பொறுத்தவரை புகழ்பெற்ற ஷேக் சையத் மசூதிக்கு வழிபாட்டாளர்கள் அதிகம் வருவது வழக்கமான ஒன்றாகும்.

இவ்வாறு அபுதாபியின் ஷேக் சையத் கிராண்ட் மசூதிக்கு வருபவர்களுக்கு அபுதாபியின் நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் இலவச பேருந்து சேவையை அறிவித்துள்ளது. இதன் மூலம் வழிபாட்டாளர்கள் தங்கள் வாகனங்களை நியமிக்கப்பட்ட பார்க்கிங் பகுதிகளில் நிறுத்தி, பொதுப் பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) ரமலான் மாதத்தின் சிறப்பு வணக்க வழிபாடுகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

ரமலான் மாத 19-25 நாட்களில் மூன்று பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரமலான் மாத 26-28 நாட்களில் இது 10 பேருந்துகளாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச பேருந்து சேவை இஷா மற்றும் தராவீஹ் தொழுகைக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு இரவு தொழுகை முடிந்து ஒரு மணி நேரம் வரை இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பயணிகளின் பிக்-அப்/டிராப்-ஆஃப் இடங்கள் வஹாத் அல் கராமா (பிரதான பார்க்கிங்) மற்றும் சையத் ஸ்போர்ட்ஸ் சிட்டி ஆகிய வாகன நிறுத்துமிடங்களில் பார்வையாளர்களுக்கு ஷேக் சயீத் மசூதியை எளிதாக அணுகுவதற்கு வசதியாக இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஷேக் சயீத் கிராண்ட் மசூதியைச் சுற்றியுள்ள சிக்னல், ஜங்க்‌ஷன் மற்றும் சாலைகளை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போக்குவரத்து நெரிசலைக் கண்காணித்து பதிலளிக்கும் விதமாகவும் பல்வேறு செயல்பாடுகளை ITC எடுத்துள்ளது.

மேலும் புனித ஷேக் சயீத் கிராண்ட் மசூதியில் தினமும் 100 டாக்சிகளை அனுப்புவதாக ITC அறிவித்திருந்தது. அத்துடன் ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களில் இந்த டாக்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!