அமீரக செய்திகள்

இன்று இரவு வானில் நடக்கவுள்ள அரிய நிகழ்வு..!! மிஸ் பண்ணிடாதீங்க…

இந்தாண்டின் மிகப்பெரிய முழு நிலவு இந்த மாத இறுதியில் சூப்பர் ப்ளூ மூனாக வானில் தோன்ற உள்ளது. அதாவது, ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு வானில் தோன்றும் நாட்கள் வரும்போது, ​​இரண்டாவதாக தோன்றும் முழு நிலவு சூப்பர் ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது.

ஏற்கனவே, முதலாவது சூப்பர் மூன் இந்த மாதத் தொடக்கத்தில் வானை அலங்கரித்த நிலையில், தற்போது இந்த இரண்டாவது சூப்பர் ப்ளூ மூன் இன்று (ஆகஸ்ட் 31) இரவு வானத்தை ஒளிரச் செய்ய உள்ளது, இது நாம் வழக்கமாகப் பார்க்கும் நிலவை விட மிகப்பெரியதாகவும் பிரகாசமாகவும் காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் மூன் என்றால் என்ன?

நிலவு பூமியைச் சுற்றி, அதன் நீள்வட்டப் பாதையில் பயணிக்கும் போது, ​​அது பூமிக்கு மிக அருகில் இருக்கும் ஒரு புள்ளியை அடையும். ‘Perigee’ என்றழைக்கப்படும் இந்தப் புள்ளியை நிலவு அடையும் போது, ​​பூமிக்கு மிக மிக அருகில் இருக்கும். அப்போது, பூமியில் இருந்து நாம் பார்க்கும் போது, பிரம்மாண்டமான தோற்றத்தில் நிலவு காட்சியளிக்கும்.

சூப்பர் ப்ளூ மூன் என்றால் என்ன?

நிலவு பூமியை முழுமையாகச் சுற்றி வர 29.5 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. சொல்லப்போனால், ஒரு மாதத்தை விட சற்று குறைவு. இந்த இடைவெளி இரண்டு அல்லது மூன்று வருடங்களில் ஒரே மாதத்தில் இரண்டு முழு நிலவுகள் வரும் வரை கூடுகிறது.

மேலும், ப்ளூ மூன் என்பதால், நிலவு உண்மையில் நீலமாக மாறாது. மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், காற்றில் உள்ள சிறிய துகள்கள், புகை அல்லது தூசி சிவப்பு அலைநீளங்களை சிதறடிப்பதால், நிலா நீல நிறத்தில் காட்சியளிக்கும் என்று நாசா கூறியுள்ளது. இது வழக்கமான நிலவு ஒளியை விட 16 சதவீதம் பிரகாசமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த அரிதிலும் அரிதான நிகழ்வினால், முழுநிலவு அதன் பிரம்மாண்ட தோற்றத்தால் நம்மை வியப்பில் ஆழ்த்துவதுடன் வளிமண்டல நிகழ்வுகள் காரணமாக சில நேரங்களில் நீல நிறத்தில் காட்சியளிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்வு எவ்வளவு அரிதானது?

சூப்பர் ப்ளூ மூன்களுக்கான காலஅளவு  கணிசமாக மாறுபடும். சில சமயங்களில் இது 20 ஆண்டுகள் வரை செல்லலாம். ஆனால், பொதுவாக அவை சராசரியாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASAவின் கூற்றுப்படி, ஒரு சூப்பர் மூன் ஆண்டுக்கு மூன்று முதல் நான்கு முறை தோன்றுகிறது. அனைத்து முழு நிலவுகளிலும் சுமார் 25 சதவீதம் சூப்பர் மூன்கள் தோன்றும், ஆனால் அவற்றில் 3 சதவீதம் மட்டுமே ப்ளூ மூன் என்று நாசா தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஒரு மாதத்தில் இரண்டு சூப்பர் மூன் நிகழ்வுகள் 2018 இல் நிகழ்ந்ததையடுத்து, இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்துள்ளது. அடுத்தபடியாக, 2037 ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்த சூப்பர் ப்ளூ மூனை ரசிக்கலாம் என்று நாசா தெரிவித்துள்ளது.

எங்கிருந்து சூப்பர் மூனைக் பார்க்கலாம்?

நீங்கள் எங்கிருந்தாலும் பிரகாசமான முழு நிலவை ரசிக்கலாம். ஒருவேளை, உங்களிடம் தொலைநோக்கி இருந்தால், அதன் வழியாக இன்னும் துல்லியமாக அற்புதமான நிலவின் தோற்றத்தைப் பார்க்கலாம்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!