அமீரக செய்திகள்

அமீரக தமிழருக்கு அடித்த ஜாக்பாட்.. 30 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகை..

அபுதாபியில் கடந்த 3ம் தேதி நடைபெற்ற பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவில் தமிழகத்தைச் சேர்ந்த நபர் 30 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்றிருக்கிறார். இந்த மிகப்பெரும் பரிசுத்தொகையை வென்றுள்ள தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த 27 வயதான காதர் ஹூசைன் எனும் நபர் ஷார்ஜாவில் உள்ள கார் வாஷிங் கம்பெனியில் 1,500 திர்ஹம்ஸ் சம்பளத்திற்கு பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு 30 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை அளித்தந்தது 206975 என்ற டிக்கெட் எண்ணாகும்.

பிக் டிக்கெட் வரலாற்றிலேயே இதுவரை இல்லாதளவு பெரிய பரிசுத்தொகையை பெற்றவரும் இவரே ஆவார். டிரா நடந்து வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்ட பின் பிக் டிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளர்களான ரிச்சர்ட் மற்றும் பௌச்ரா ஆகியோர் காதர் ஹூசைனை தொடர்பு கொள்ள முயற்சித்த போது விடுமுறையில் தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளதாலும், அவரது மொபைல் போனை அணைத்திருந்ததாலும் அவரை அணுக முடியவில்லை என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

ஆனால், அவர் இந்த டிராவை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்ததன் காரணத்தால், உடனடியாக ஞாயிற்றுக்கிழமை ஷார்ஜாவுக்குத் திரும்பி வந்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் “இது ஒரு நம்பமுடியாத தருணம். இது இறைவனின் அருட்கொடை. இல்லையெனில், 1,500 திர்ஹம்ஸ் சம்பாதிக்கும் நபர் 30 மில்லியன் திர்ஹம்ஸ் எனும் பெரும் பரிசுத்தொகையை எவ்வாறு வெல்ல முடியும்”என்று தெரிவித்துள்ளார்.

டிக்கெட்டுகளை வாங்க, ஹுசைன் இது பற்றி மேலும் கூறுகையில், “1,500 திர்ஹம்ஸ் சம்பளம் வாங்கும் நானும் 1,200 திர்ஹம்ஸ் சம்பளம் வாங்கும் எனது நண்பரும் சக ஊழியருமான தேவராஜூம் எங்களுக்கு கிடைக்கும் சிறியளவிலான சம்பளத் தொகை மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் டிப்ஸ் ஆகியவற்றிலிருந்து பணத்தை மிச்சப்படுத்தி டிக்கெட் வாங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “நான் கடந்த 2017 முதல் அமீரகத்தில் வசித்து வருகிறேன். அத்துடன் கார் வாஷிங் சர்வீஸ் சென்டரில் வேலை செய்து வருகிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் 7-8 முறை டிக்கெட் வாங்க முடிந்தது. நான் ஒவ்வொரு மாதமும் பணத்தைச் சேமித்தேன், பின்னர் நானும் எனது நண்பர் தேவராஜூம் டிக்கெட்டை வாங்குவோம்” என்று கூறியுள்ளார்.

பிக் டிக்கெட்டில் வென்றிருந்தாலும், ஹுசைன் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கவும் வேலை செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதனை பற்றி தெரிவிக்கையில் “இங்கே நான் சொந்தமாக தொழில் தொடங்குவேன். மேலும், எனக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர். அவர்களை இங்கு அழைத்து வந்து, குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன்” என்றும் கூறியுள்ளார். கூடுதலாக தான் மறுபடியும் பிக் டிக்கெட்டை வாங்கும் முயற்சி எடுக்க மாட்டேன். இறைவன் எனக்கு எதைக் கொடுத்தானோ அதுவே போதும் என்றும் தெரிவித்துள்ளார். 

பிக் டிக்கெட் குழுவானது வரும் ​​ஜனவரி 3 ஆம் தேதி, தனது மிகப்பெரிய பரிசுத் தொகையான 35 மில்லியன் திர்ஹம்ஸிற்கான ராஃபிள் டிராவை நடத்தவுள்ளது. இதற்கான டிக்கெட்டினை பிக் டிக்கெட் இணையதளத்திலும் அபுதாபி மற்றும் அல் அய்ன் சர்வதேச விமான நிலையங்களிலும் வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!