அமீரக செய்திகள்

துபாய் மெட்ரோ, டிராம், பேருந்துகளுக்கு இனி nol கார்டு தேவையில்லை.. உங்களின் முகமே போதும்.. !! வெகுவிரைவில் நடைமுறைக்கு வரும் புதிய அம்சம்…

துபாயில் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு டிக்கெட், நோல் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் டிக்கெட் எடுப்பது பயன்பாட்டில் இருந்து வரும் பட்சத்தில் மிக விரைவிலேயே இவை இல்லாமலேயே பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம் என தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் மெட்ரோ, டிராம், பேருந்துகள், டாக்ஸிகள் மற்றும் அப்ரா போன்ற பொதுப் போக்குவரத்திற்கான கட்டணத்தைச் செலுத்த இவை ஏதுமின்றி பயணிகள் கடந்து செல்லும் ஸ்மார்ட் கேட் ஒன்றை சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிமுகப்படுத்தவிருப்பதாக தகவல் கூறப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் கேட் தடையற்ற பயணத்தை உறுதி செய்ய முக அங்கீகாரத்தைப் (face recognition) பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பொது போக்குவரத்தில் பயணிக்க விரும்பும் பயணிகள் தங்கள் முகத்தைக் கேமராவிற்கு முன் காட்டினாலே போதும் என்றும், அதன் பிறகு 3D கேமரா மூலம் அவர்களின் முகங்களை ஸ்கேன் செய்து கணினி அவர்களை அடையாளம் காணும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர்களின் பயோ-டேட்டா பின்னர் சரிபார்க்கப்பட்டு, அவர்களின் கணக்குகளில் இருந்து டிக்கெட் கட்டணம் கழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (திங்கள்கிழமை) துபாய் வேர்ல்ட் ட்ரேட் சென்டரில் தொடங்கும் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்பக் கண்காட்சியான Gitex Global இல் RTA காட்சிப்படுத்தும் பல்வேறு ஸ்மார்ட் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கண்காட்சியில் RTA-வின் ஸ்மார்ட் கேட் திட்டம் மட்டுமின்றி பல்வேறு திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் ஆப் மூலம் கார் உரிமை பரிமாற்றம்:

துபாய் டிரைவ் செயலி மூலம் வாகன நம்பர் பிளேட்டுகளின் உரிமையை மாற்றுவதற்கான சேவையை RTA அறிமுகப்படுத்த உள்ளது. இது தொடர்பாக வெளியான தகவல்களின் படி, வாடிக்கையாளர்கள் ‘UAE PASS’ என்ற டிஜிட்டல் ஐடியைப் பயன்படுத்தி இந்த ஆப் வழியாக விற்பனை நடைமுறைகளை முடிக்கலாம் என்றும், இது RTA சேவை மையத்திற்குச் செல்லாமல் பரிவர்த்தனையை முடிக்க உதவுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் விற்பனை ஒப்பந்தம் டிஜிட்டல் முறையில் கையெழுத்திடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் வழியில் காலியாக உள்ள பார்க்கிங்கைக் கண்டறிதல்

RTA ஆப்ஸ் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் பார்க்கிங் பகுதிகளில் காலியாக இடம் உள்ளதா என்பதையும் கண்டறியலாம். RTA செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பிக் டேட்டாக்களைப் பயன்படுத்துவதன் மூலம், காலியாக உள்ள பார்க்கிங் இடங்கள் அடையாளம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3D பிரிண்டட் அப்ரா:

இன்று தொடங்கும் தொழில்நுட்பக் கண்காட்சியில் உலகின் முதல் 3D பிரிண்டட் அப்ராவின் மாடல் காட்சிப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நவீன அப்ரா குறித்து RTA வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த எலெக்ட்ரிக் அப்ரா ஒரே நேரத்தில் 20 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. மேலும், பாரம்பரிய வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அப்ராக்கள் நவீன அம்சங்களைப் பயன்படுத்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட செயலி:

RTA அதன் துபாய் டிரைவ் செயலியில் யூசர் இன்டர்ஃபேஸ் (user interface) போன்றவற்றை மாற்றியமைத்து செயலியை புதுப்பித்துள்ளது. மேலும், அதன் மேம்பாட்டில் AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

RTA, இயக்குநர் ஜெனரலும் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மட்டர் அல் டேயர் இது குறித்து தெரிவிக்கையில், செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும், வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்தவும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் AI ஐப் பயன்படுத்துவதற்கு RTA உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!