அமீரக செய்திகள்

ஒரே வருடத்தில் 7 மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாட்டைக் குறைத்துள்ள ‘துபாய் கேன்’… எப்படி தெரியுமா..??

துபாயில் கடந்த ஆண்டு நகரம் முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டைக் குறைக்க நீடித்த நிலைத்தன்மை இயக்கம் (Sustainability movement) தொடங்கப்பட்டது. அதனடிப்படையில் துவங்கப்பட்ட துபாய் கேன் (Dubai Can) அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக சுமார் 12 மாதங்களில் 7 மில்லியனுக்கும் அதிகமான 500-மில்லி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த முன்முயற்சியில், வீடுகள், அலுவலகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பள்ளிகளில் இருந்தும் இதன் பங்கேற்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், நகரம் முழுவதும் பிளாஸ்டிக் கேன்களின் பயன்பாட்டை ஒழிக்க, வெவ்வேறு இடங்களில் இலவச தண்ணீரை வழங்கும் 50 நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. துபாய் கேன் வசதியானது அதன் கூட்டாளிகள் மற்றும் ஸ்பான்சர்களின் (partners and sponsors) உதவியுடன் துபாயில் இருக்கக்கூடிய பொது பூங்காக்கள், கடற்கரைகள் மற்றும் பிரபலமான சுற்றுலா தலங்களில் நீர் நிலையங்களை அமைத்துள்ளது.

இவற்றில் கைட் பீச் (Kite Beach), துபாய் மெரினா (Dubai Marina) மற்றும் டவுன்டவுன் துபாய் (Downtown Dubai) ஆகியவை அடங்கும். சமீபத்தில் ஹத்தா, துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி, போர்ட் ரஷித் மற்றும் துபாய் இன்டர்நெட் சிட்டி ஆகிய நான்கு இடங்களிலும் இந்த வசதி சேர்க்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, அனைத்து நீர் நிலையங்களும் முனிசிபாலிட்டி, ஹெல்த்கேர் மற்றும் ஃபெடரல் விதிமுறைகளுக்கு இணங்கி உயர்தர சுகாதாரங்களை கடைபிடிக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், நீர் நிலையங்களால் வழங்கப்படும் சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீரானது உள்ளூர், வளைகுடா மற்றும் உலக சுகாதார அமைப்பின் தரநிலைகளின்படி சோதிக்கப்பட்ட பின்னரே பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தனியார் நிறுவனங்களின் அலுவலகங்களிலும் இந்த முறை பயன்படுத்தப்படுவதன் காரணமாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் அளவு குறைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதுபோல, இந்த முயற்சியானது, கடந்த ஜூன் 1, 2022 முதல் நடைமுறைக்கு வந்த ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மீதான தடையுடன் ஒத்துப்போவதாகவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் (Dubai’s Department of Economy and Tourism – DET) கார்ப்பரேட் வியூகம் மற்றும் செயல்திறன் துறையின் செயல் தலைமை செயல் அதிகாரி (CEO) யூசுப் லூத்தா அவர்கள் கூறுகையில், இந்த முயற்சியின் முன்னேற்றம் குறித்து பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த முயற்சியின் பலனாக தனி நபர் மற்றும் சமூக அளவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

அதேவேளை, துபாய் பொருளாதார அஜெந்தா D33 இன் (Dubai Economic Agenda D33) இலக்கிற்கு பங்களிக்கும் பசுமையான நடைமுறைகள் மற்றும் வாழ்க்கை முறைகளை பின்பற்றுமாறு குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் துபாய் கேன் நிறுவனத்தின் முயற்சியானது ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளை (UNSDGs) அடைவதற்கான துபாயின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!