அமீரக செய்திகள்

மொபைல் எண்ணுக்கு வரும் எந்தவொரு லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம்!!! – UAE குடியிருப்பாளர்களுக்கு மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுக்கும் அதிகாரிகள்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து குறுஞ்செய்தி அனுப்புபவர்களின் மோசடி வலை குறித்து குடியிருப்பாளர்களுக்கு அதிகாரிகள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே, இது போன்ற மோசடி குற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், தற்போது மற்றொரு மோசடிக்கும்பல் குடியிருப்பாளர்களை குறிவைத்து சுற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து வெளியாகியுள்ள தகவல்களின் படி, தற்போது துபாயின் வாகனங்களுக்கான கட்டண டோல்கேட் அமைப்பான சாலிக் (Salik) பெயரில் மோசடி நடைபெறுவது அம்பலமாகியுள்ளது. அதில் “சாலிக்: உங்கள் வாகன பயணக் கட்டணத்தை செலுத்தவும்” என்று தெரியாத எண்ணிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. மேலும் அபராதத்தைத் தவிர்க்க முடிந்தவரை விரைவில் தொகையை செலுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ள செய்தியில் சந்தேகத்திற்கிடமான லிங்க்கும் கொடுக்கப்பட்டு உள்ளது.

எனவே, இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற எண்களிலிருந்து பெறப்படும் செய்திகளுக்கு யாரும் பதிலளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒரு குறுஞ்செய்தி ஒரு மோசடி செய்தி என்பதை அறிந்துகொள்ள சில பொதுவான தகவல்கள் பின்வருமாறு:

  • தெரியாத எண் அல்லது ஐடியில் இருந்து பெறப்படும் செய்திகள் ஆதாரத்தன்மையை காண்பிக்காது.
  • இத்தகைய செய்திகள் பெரும்பாலும் தவறான இலக்கண நடையில் இருக்கும்.
  • லிங்க் உடன் அனுப்பப்படும் செய்தி அல்லது உடனடி பதிலைக் கேட்கும் செய்தி போன்றவை மோசடிப் பின்னணியையே கொண்டிருக்கும்.

குறிப்பாக, அறியப்படாத சர்வதேச எண்ணிலிருந்து போலி எச்சரிக்கைகளும் பெறப்பட்டுள்ளது. இது குறித்து சாலிக்கின் (Salik) வாடிக்கையாளர் சேவை முகவர் கூறுகையில், எங்களது நேரடி டொமைனிலிருந்து சாலிக் எனும் பெயருடன் பெறப்படாத செய்திகள் பெரும்பாலும் போலியானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆகவே, இது போன்ற செய்தியைப் பெறும் குடியிருப்பாளர்கள் எந்தப் பணமும் செலுத்தக்கூடாது அல்லது குறுஞ்செய்தியில் இருக்கும் எந்த லிங்க்கையும் கிளிக் செய்யக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், இது போன்ற மோசடி வலையில் விழாமல் இருக்க, குடியிருப்பாளர்கள் ஸ்மார்ட் சாலிக் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் பணம் செலுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!