அமீரக செய்திகள்

இந்தியா-துபாய் இடையே தனது முதல் A350-900 விமான சேவையைத் தொடங்கிய ஏர் இந்தியா..!! அப்படி என்ன ஸ்பெஷல்..?

இந்தியாவின் பட்ஜெட் கேரியரான ஏர் இந்தியா விமான நிறுவனம், டெல்லி-துபாய் வழித்தடத்தில் தனது புதிய ஏர்பஸ் A350-900 விமானச் சேவையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இது ஏர்பஸ் நிறுவனத்திடம் ஏர் இந்தியா சமீபத்தில் வாங்கிய பெரிய ரக A350 விமானத்தின் சர்வதேச அறிமுகமாகும்.

மேலும், இந்த சேவை கடந்த மே 1 ஆம் தேதி தொடங்கப்பட்டதாக விமான நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனவே, டெல்லி மற்றும் துபாய் இடையே பயணிக்கும் வாடிக்கையாளர்கள், A350 சேவையை அனுபவிக்க டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும் ஏர் இந்தியா கூறயுள்ளது.

இந்த புதிய விமானச் சேவையின் அறிமுகமானது, டெல்லி மற்றும் துபாய் விமான நிலையங்களில் ஒரு சில கொண்டாட்டங்களுடன் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன், விமானம் புறப்படுவதற்கு முன்பாக விருந்தினர்களுக்கு A350 நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டில் டாடா குழுமத்திற்கு கைமாறிய ஏர் இந்தியா விமான நிறுவனம், தற்போது ஐந்து இந்திய நகரங்களில் இருந்து துபாய்க்கு வாரத்திற்கு மொத்தம் 72 விமானங்களை இயக்குகிறது. அதில் 32 விமானங்கள் டெல்லியில் இருந்து இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஏர் இந்தியா விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அதன் சேவையை மேம்படுத்தவும், இழந்த சந்தைப் பங்கை மீண்டும் பெறுவதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச நெட்வொர்க்கை விரிவுபடுத்தவும் டாடா குழுமம் புதிய முதலீடுகளில் பில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

A350-900 விமான அமைப்பு:

ஏர் இந்தியா கேரியர் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, புதிய ஏர்பஸ் A350-900 விமானமானது, 15,000 கிலோமீட்டர் தூரம் பறக்கக்கூடிய ஒரு நீண்ட தூர பயணிகள் விமானம் ஆகும். மேலும் மூன்று வகுப்புகளை கொண்டி இந்த விமானமானது 300 முதல் 350 பயணிகளுக்கு இடமளிக்கும்.

மேலும், இந்த விமானத்தின் பிசினஸ் வகுப்பில் முழு தட்டையான படுக்கைகள் கொண்ட 28 பிரைவேட் ரூம்களும், பிரத்யேக பிரீமியம் எகானமி கேபினில் கூடுதல் லெக்ரூம் மற்றும் பிற வசதிகளுடன் 24 இருக்கைகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், எகானமி வகுப்பில் 264 இருக்கைகள் இருப்பதாகவும் ஏர் இந்தியா கூறியுள்ளது.

அதுமட்டுமில்லாமல், வழக்கமான சிறிய ரக விமானங்களில் இருக்கும் 3+3 இருக்கைகள் என்றில்லாமல், ஒரு வரிசையில் 3+3+3 என ஒன்பது இருக்கைகள் இருக்கும். மேலும், A350 இல் உள்ள அனைத்து இருக்கைகளிலும் Panasonic eX3 பொழுதுபோக்கு அமைப்பு மற்றும் 2,200 மணிநேர பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை வழங்கும் HD திரைகள் இருப்பதாகவும் ஏர் இந்தியா நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!